காங்கிரஸ் வெளியுறவுப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து ஆனந்த் சர்மா ராஜினாமா

ஆனந்த் சர்மா
ஆனந்த் சர்மா
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுப் பிரிவு தலைவர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இன்று ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆனந்த் சர்மா எழுதிய ராஜினாமா கடிதத்தில், “இளம் தலைவர்களை பொறுப்புக்கு கொண்டுவருவதற்காக இந்தக் குழு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று நான் முன்பே காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் இருவருக்கும் தெரிவித்ததன் அடிப்படையில் எனது பொறுப்பினை ராஜினாமா செய்கிறேன். இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக கட்சித் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுப் பிரிவு 2018-இல் அமைக்கப்பட்டதில் இருந்து அப்பிரிவின் தலைவராக ஆனந்த் சர்மா இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழுவின் (CWC) உறுப்பினரான ஆனந்த சர்மா, 40 ஆண்டுகளாக சர்வதேச விவகாரங்களில் காங்கிரஸின் முன்னணி முகமாக இருந்து வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகளில் ஆனந்த் சர்மா முக்கிய பங்காற்றினார். இந்தியா - ஆப்பிரிக்கா கூட்டாண்மை மற்றும் முதல் இந்தியா - ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர் இவர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சமீபத்திய அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுக்களிலும் அவர் உறுப்பினராக இருந்தார். 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை உலகுக்கு கொண்டு சென்றதில் ஆனந்த் சர்மா முக்கியமானவராக இருந்தார். இவர் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் உலக அளவில் வணிக அமைப்பு ஒப்பந்தம் மற்றும் விரிவான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in