‘இந்திய சினிமாவின் ரோல் மாடல்!’ - சரோஜா தேவிக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

‘இந்திய சினிமாவின் ரோல் மாடல்!’ - சரோஜா தேவிக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி
Updated on
1 min read

புதுடெல்லி: பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபல திரைப்பட ஆளுமை சரோஜா தேவியின் மறைவு வருத்தமளிக்கிறது.

இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ரோல் மாடலாக சரோஜா தேவி நினைவுகூரப்படுவார். அவரது பன்முக செயல்திறன்கள் பல தலைமுறைகளுக்கு அழியாத அடையாளங்களை விட்டுச்சென்றுள்ளன. பல்வேறு மொழிகளில், பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கிய அவரது பணிகள் பன்முக திறமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புகழஞ்சலிக் குறிப்பில், ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜா தேவி. தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் 'அபிநய சரஸ்வதி' எனப் புகழப்பட்டவர்.

நான் பேச நினைப்பதெல்லாம்... நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜா தேவி அம்மையார்.

சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜா தேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in