Published : 05 Jul 2025 07:06 PM
Last Updated : 05 Jul 2025 07:06 PM
மும்பை: "தாக்கரேக்கள் இருவரையும் ஒன்றிணைத்தது நான்தான் என ராஜ் தாக்கரே கூறி இருக்கிறார். அவர்களை ஒன்றிணைத்ததற்கான பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி" என்று மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக - சிவ சேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. “அரசு எங்கள் மீது இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என அவர்கள் கூறினர். இதற்கு பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து, மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது.
மாநில அரசின் இந்த முடிவை அடுத்து, அதற்கான வெற்றி விழா மும்பையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாக இணைந்து மேடையில் தோன்றினர். அப்போது, அரங்கத்தில் இருந்த இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாக மிகுதியில் கோஷங்களை எழுப்பினர்.
விழாவில் பேசிய ராஜ் தாக்கரே, “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் உத்தவ் தாக்கரேவும் அரசியல் மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும் இணைய வேண்டும் என்று பால் தாக்கரே எவ்வளவோ முயன்றார். ஆயிரக்கணக்கானோர் முயன்றார்கள். அவர்களால் எல்லம் முடியாததை தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்துவிட்டார்” என கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ், “நடைபெற்றது மராத்தி மொழிக்கான வெற்றி விழா. இதில் உத்தவ் தாக்கரே, தான் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது எப்படி என்பது பற்றியே பேசினார். மும்பை மாநகராட்சியை 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தபோதும், மும்பைக்கு தாங்கள் செய்தது என்ன என்பது குறித்து அவர்களால் பேச முடியவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மும்பைக்கு வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம். மும்பையில் உள்ள மராத்தி மக்களுக்காக அயராது உழைத்து வருகிறோம்.
நாங்கள் மராத்திகளாக இருப்பதற்காக பெருமைப்படுகிறோம். அதேநேரத்தில், அனைவரையும் உள்ளடக்கிய இந்துத்துவாவிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். தாக்கரேக்கள் இருவரையும் ஒன்றிணைத்தது நான்தான் என ராஜ் தாக்கரே கூறி இருக்கிறார். அவர்களை ஒன்றிணைத்ததற்கான பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT