குடும்ப வருமானம் பற்றி அடுத்த ஆண்டில் கணக்கெடுப்பு: மத்திய புள்ளியியல் அமைச்சகம் திட்டம்

குடும்ப வருமானம் பற்றி அடுத்த ஆண்டில் கணக்கெடுப்பு: மத்திய புள்ளியியல் அமைச்சகம் திட்டம்
Updated on
1 min read

நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த ஆண்டில் குடும்ப வருமானம் பற்றி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் 2026-ல் குடும்ப வருமானம் குறித்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகத்துக்கு வழிகாட்ட ஐஎம்எப் முன்னாள் செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா தலைமையில் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு (டிஇஜி) அமைக்கப்படும். இக்குழு கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்றும் உலக நாடுகளில் இது தொடர்பாக கடைபிடிக்கப்படும் முறைகளை ஆய்வு செய்து சிறந்தது எது என்றும் பரிந்துரை செய்யும்.

இந்த கணக்கெடுப்பு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுத்துவதால் குடும்ப வருமானம் மீது ஏற்படும் தாக்கத்தையும் அறிந்து கொள்ள முயலும்.

இந்தியாவில் இதுபோன்ற கணக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் முறை ஆகும். வருவாய் பகிர்வு எப்படி உள்ளது மற்றும் நலத்திட்டங்கள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப கொள்கைகளை வகுக்க இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 1950-ம் ஆண்டு நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக குடும்ப வருமானம் குறித்த தகவல்களை சோதனை முறையில் சேகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதுபோல 1960-களில் ஒருங்கிணைந்த வீட்டு கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக குடும்ப வருமான கணக்கெடுப்பு முயற்சி மேகொள்ளப்பட்டது. ஆனால், இதில் நம்பகமான வருமான தரவை சேகரிக்க முடியாமல் போனது. குறிப்பாக, நுகர்வு மற்றும் சேமிப்பு மதிப்பீடுகளைவிட வருமான மதிப்பீடுகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த முயற்சி தொடரப்படவில்லை.

1980-களில் குடும்ப வருமான தரவுகளை சேகரிப்பது சாத்தியமா என்று மீண்டும் ஆராயப்பட்டது. ஆனால், இதுவும் தேசிய அளவிலான கணக்கெடுப்புக்கு வழிவகுக்கவில்லை.

நேரில் சென்று வருமான தரவை சேகரிப்பதில் சிரமம் இருக்கிறது என்பதை இந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இந்த சிக்கல்களை தீர்க்கவும் ஆய்வு நடைமுறைகள் தெளிவாக இருக்கவும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் அனுபவங்களை மனதில் வைத்து ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in