புனே ஆற்றுப் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு - பலர் மாயம்

புனே ஆற்றுப் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு - பலர் மாயம்
Updated on
1 min read

புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கபட்ட நிலையில், தற்போது மேலும் 2 உடல்கள் மீட்கபட்டுள்ளதாகவும், 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 250 வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணி கடினமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி தன்னை தொடர்பு கொண்டு கேட்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட இந்த பாலத்தின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆற்றின் நீரோட்டத்தை காண அதிகமான மக்கள் பாலத்தின் மீது குவிந்தததே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in