Last Updated : 07 Jun, 2025 10:54 AM

13  

Published : 07 Jun 2025 10:54 AM
Last Updated : 07 Jun 2025 10:54 AM

அடுத்த பாஜக தேசியத் தலைவர் யார்? - முன்னணியில் உள்ள 3 பேரின் பட்டியல்!

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக 3 தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், பெரும்பாலான மாநிலங்களில் பாஜக அமைப்புத் தேர்தல்கள் முடிந்துவிட்டது. இதனையடுத்து புதிய தேசியத் தலைவரை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து கட்சி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றாலும், உள் விவாதங்கள் நடந்து வருவதாகவும், ஜூன் மாத நடுப்பகுதியில் தலைவர் தேர்வுக்கான முறையான செயல்முறை தொடங்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தேசியத் தலைவர் போட்டியில் 3 பேரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஒடிசாவைச் சேர்ந்த முக்கிய ஓபிசி தலைவரும், மத்திய தலைமைக்கு நெருக்கமாக இருப்பவருமான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ள முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக உள்ளார்.

சிவராஜ் சிங் சவுகான் மற்றொரு முக்கியப் போட்டியாளராக உருவெடுத்துள்ளார். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான இவர், கட்சியின் அடிமட்டத்திலிருந்து அனுபவமுள்ள வெகுஜனத் தலைவராகக் பார்க்கப்படுகிறார்.

ஹரியானா முதல்வராக இருந்து தற்போது மத்திய அமைச்சராகியுள்ள மனோகர் லால் கட்டார், கட்சி மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டவர். எனவே இவரும் தேசியத் தலைவர் பந்தயத்தில் உள்ளார்.

தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இவர் ஜனவரி 2020 முதல் இந்தப் பதவியை வகித்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தல் வரை கட்சியை வழிநடத்த அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. எனவே தற்போதைக்கு, ஜே.பி.நட்டாவுக்கு இரண்டாவது முழு பதவிக்காலம் வழங்கப்படுமா அல்லது கட்சி புதிய முகத்தைத் தேர்வுசெய்யுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தேசியத் தலைவர் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிட விரைவில் ஒரு தேர்தல் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேட்புமனு தாக்கல், ஆய்வு மற்றும் தேவைப்பட்டால் வாக்களிப்பு ஆகியவை நடக்கும் என சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x