பெங்களூரு காவல் துறை மீது மக்கள் அதிருப்தி; அரசிடம் அறிக்கை கேட்கும் கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரு காவல் துறை மீது மக்கள் அதிருப்தி; அரசிடம் அறிக்கை கேட்கும் கர்நாடக உயர் நீதிமன்றம்
Updated on
2 min read

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என காவல் துறை மீது பாதிக்கப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது பெங்களூரு மைதானத்துக்கு வெளியே வியாழக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பெங்களூருவின் யெலஹங்காவில் உள்ள வீட்டில் சிறுமி திவ்யான்ஷியின் இறுதிச் சடங்குக்காக உறவினர்கள் கூடினர். அப்போது பேசிய திவ்யான்ஷியின் தந்தை சிவகுமார் உருக்கமான பல தகவல்களைப் பகிர்ந்தார்.

அவர், “எனது மகள் கேட் எண் 15-இல் நெரிசலில் சிக்கி காயமடைந்து விழுந்தார். அப்போது எனது மனைவி மற்றும் மைத்துனியும் அங்கு இருந்தனர். காயம்பட்டு கிடந்த மகளை அதிகாரிகள் வந்து பார்த்தனர். ஆனால், அவர்கள் சரியான முதலுதவி கூட வழங்கவில்லை. என் மனைவி உதவிக்காக கெஞ்சினார். இறுதியாக, என் மகளை ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். காவல் துறையினரின் எந்த உதவியும் செய்யவில்லை. எஃப்ஐஆர் பதிவு செய்ய கூட நாங்கள் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

அவர்கள் ஏன் சரியான ஏற்பாடுகளைச் செய்யவில்லை? மைசூர் அரண்மனை சாலைக்குச் சென்று பாருங்கள். அரசியல் நிகழ்வுகளுக்கு அவர்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறார்கள். இந்தக் கொண்டாட்டத்துக்கு அவர்கள் சரியான திட்டமிடலோடு இருந்திருக்க வேண்டும். உளவுத் துறையும் திட்டமிட்டிருக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்” என்றார் அந்தத் தந்தை. மேலும், இறுதிச் சடங்குகள் மற்றும் தகனத்துக்காக தனது மகளின் உடல் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கூட்ட நெரிசலில் இறந்த 28 வயது மென்பொருள் பொறியாளரான காமாட்சி தேவியின் உடல் இன்று இறுதிச் சடங்குகளுக்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான மயிலாடும்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெங்களூரில் பணிபுரிந்த காமாட்சி தேவி, சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடச் சென்றிருந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி அவர் இறந்தார். அவரது உடல் மயிலாடும்பாறையில் உள்ள விவேகானந்தா பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இறுதி அஞ்சலி செலுத்த கூடினர்.

உயர் நீதிமன்றம் உத்தரவு: இதனிடையே, பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூன் 10-ம் தேதிக்குள் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. பொறுப்புத் தலைமை நீதிபதி வி.காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து பொது நல வழக்கு மனுவாகக் கருத நீதிமன்றப் பதிவேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. | வாசிக்க > ‘அரசுக்கு ரூ.50 லட்சம் நான் தருகிறேன்... என் மகனை திருப்பித் தருவார்களா?’ - பெங்களூரு துயரக் குரல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in