‘அரசுக்கு ரூ.50 லட்சம் நான் தருகிறேன்... என் மகனை திருப்பித் தருவார்களா?’ - பெங்களூரு துயரக் குரல்

விதான் சவுதாவில் திரண்டிருந்த ஆர்சிபி ரசிகர்கள் | படம்: சுதாகர் ஜெயின்.
விதான் சவுதாவில் திரண்டிருந்த ஆர்சிபி ரசிகர்கள் | படம்: சுதாகர் ஜெயின்.
Updated on
2 min read

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை இந்த நேரம் ஒரு பெருங்கூட்டம் கோலியை காணப் போகிறோம், கொண்டாடப் போகிறோம் என பல நூறுக் கனவுகளுடன் திரண்டிருந்தது. ஆனால், சில நிமிடங்களில் கூட்ட நெரிசல், கூச்சல், குழப்பம் என பதற்றம் நிலவ 11 உயிர்கள் பறிபோயின. அரசு, போலீஸ், ஆர்சிபி என யாரும் எதிர்பார்த்திராத பெருந்துயரம் தான். என்றாலும் அரசு இயந்திரங்கள் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு நகர்ந்து செல்லும், காவல் துறை தன் கடமைகளில் கருத்தாகிவிடும். ஆர்சிபி இனி அடுத்த ஐபிஎல் தொடருக்கு உயிர் பெறும். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு மட்டுமே இச்சம்பவத்தினால் தீரா வேதனையும், நீங்கா துயரமும்!

ரூ.50 லட்சம் தருகிறேன்... - அப்படி தாங்க முடியாத துன்பத்துக்குள் சிக்கிய தந்தை ஒருவர் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ”சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல் என்ற செய்தியைப் பார்த்தவுடனேயே நான் என் மகனுக்கு ஃபோன் அடித்தேன். ஆனால் அவன் எடுக்கவில்லை. எனக்கு நெருடலாக இருந்தது. சிறிது நேரத்தில் எனக்கு போன் வந்தது. போலீஸ் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து ஒரு சடலத்தை அடையாளம் காணச் சொன்னார். எனக்கு அதற்கான தைரியம் இல்லை.

என் மகனுக்கு 20 வயதுதான் ஆகிறது. அவன் இறந்துவிட்டான். அரசாங்கம் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. நான் ரூ.50 லட்சமோ அல்லது ரூ.1 கோடியோ தருகிறேன். அவர்களால் எனது மகனைத் திரும்பித் தர முடியுமா?” என்று வினவியுள்ளார். இறந்துபோன மனோஜ் குமார், பிரசிடென்ஸி கல்லூரியில் பிபிஏ படித்துக் கொண்டிருந்தார். அன்றைய தினம் சின்னசாமி ஸ்டேடியம் சென்ற அவர் சடலமாகத் தான் வீடு திரும்பியுள்ளார்.

‘ஆசையின் விலை உயிரா?’ - என் மகள் திவ்யன்ஷி, 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அறிவாளி. அவளுக்கு கிரிக்கெட் நிறைய தெரியும். கோலியை ரொம்பப் பிடிக்கும். அன்றைய தினம் கோலியை சற்று அருகில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் அவளது ஆசையில் விலை அவளது உயிராகிவிட்டது.

‘அவன் தூங்கிக் கொண்டிருந்தான்’ - “என் மகன் பிரஜ்வாலுக்கு 22 வயது. பொறியியல் முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அன்றைய தினம் மைதானத்துக்கு செல்ல வேண்டாம் என்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவன் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் எனக்கு காவல் துறையிலிருந்து ஓர் அழைப்பு. வைதேகி மருத்துவமனைக்கு வாருங்கள் என்றார்கள். அங்கே நிறைய சடலங்கள் இருந்தன. எனக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. அங்கே எனது மகன் இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டே சென்றேன். ஆனால், அவன் ஓரமாகக் கிடந்தான். பார்ப்பதற்கு தூங்கிக் கொண்டிருப்பதைப் போலவே தெரிந்தது” என்று பிரஜ்வாலின் தாய் பார்வதி கண்ணீருடன் கூறினார்.

பெண் பார்த்துவிட்டு... - மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ண சந்திரன் (26), மைசூருவில் இன்ஜினியராக பணி புரிந்து கொண்டிருந்தார். நேற்று மாலை பெண் பார்ப்பதற்காக சென்றுவிட்டு திரும்பும் வழியில் சின்னசாமி மைதானத்துக்கு சென்றுள்ளார். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்தார். “நாங்கள் அவன் பெண் பார்த்துவிட்டுச் சென்றிருப்பான் என்று நினைத்திருந்தோம். 6 மணிக்கு ஒரு போன் அழைப்பு, அழைத்தவர்கள் என் மகன் இறந்த செய்தியை சொன்னார்கள்.” என்றார் அவரது தந்தை.

இரண்டு நாட்கள் முன்னர்தான்.. - தமிழகத்தின் கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் பெங்களூருவில் அமேசான் நிறுவனத்தில் அனலிஸ்டாக வேலை செய்து வந்தார். பெங்களூரு கூட்ட நெரிசலில் அவரும் உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து அவரது உறவினர் வீரபாகு தமிழ்ச் செல்வன் கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நாங்கள் எல்லோரும் ஒன்றுகூடினோம். அண்ணன், தங்கைகள், தம்பிகள், அக்கா என்று எல்லோரும் மகிழ்ந்திருதோம். நேற்று இப்படியாகிவிட்டது. காமாட்சிக்கு திருமணம் முடிவு செய்வதாயிருந்தது. கிட்டதட்ட எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன. ஆனால், இன்று அவர் எங்களோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை” என்றார். இவ்வாறாக மகன், மகள் என பல உறவுகளைப் பிரிந்தவர்கள் தங்களின் வேதனைகளை ஊடகத்திடம் பகிர்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in