Published : 03 Jun 2025 07:37 AM
Last Updated : 03 Jun 2025 07:37 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவின்போது நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா நடத்தப்பட்டது. பாஷா சங்கம், மத்திய கலாச்சாரத் துறை, சென்னை சிஐசிடியுடன் இணைந்து இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்திய விழாவில் தமிழர்களான உத்தர பிரதேச மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். உ.பி.யின் பிரயாக்ராஜில் மொழிகளை பாலமாக்கி தேச ஒற்றுமைக்காக 49 ஆண்டுகளாக செயல்படும் பொதுநல அமைப்பு பாஷா சங்கம்.
இந்த சங்கம் கடந்த 34 ஆண்டுகளாக பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை வைக்க வலியுறுத்தி வந்தது. அந்த முயற்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இந்து தமிழ் திசை நாளிதழும் தொடர்ந்து செய்திகள்வெளியிட்டு, பல்வேறு வகைகளில் உதவியது. இறுதியில் பிரயாக்ராஜ் டிஐஜியாக நியமிக்கப்பட்ட தமிழர் டாக்டர் என்.கொளஞ்சி முயற்சியால், மகா கும்பமேளா விழாவின் போது திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
இதர பல சிலைகள் நிறுவப்பட்டு அவற்றுக்கான திறப்பு விழா நடத்தவும், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கில் மக்கள் குவிந்து நெரிசல் அதிகமானதால் விழா நடைபெறவில்லை. இதனால், திருவள்ளுவர் சிலைக்கான அறிமுக விழாவை பாஷா சங்கம், மத்திய கலாச்சாரத் துறை, அலகாபாத் அருங்காட்சியகம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) ஆகியவற்றுடன் ’இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து நடத்தின.
மத்திய அரசின் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற விழாவில் வாராணசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் உரையாற்றினார். அப்போது, ‘‘இங்கு திருவள்ளுவர் சிலை நிறுவ கோரிக்கை விடுத்த பாஷா சங்கம், அதற்கு உதவிய இந்து தமிழ் திசை நாளிதழ், டிஐஜி கொளஞ்சி ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.
அறம், பொருள், இன்பம் என 1330 குறள் எழுதியது திருவள்ளுவரின் தனித்துவம். அவர் தம் குறளில் தமிழ் எனும் வார்த்தையை எங்குமே பயன்படுத்தவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் அது உலகப் பொதுமறையாகக் கருதப்படுகிறது. தமிழகத்துக்கு வந்த மகாத்மா காந்தி மூலமொழியானத் தமிழைக் கற்று திருக்குறளைப் படிக்க விரும்பினார்’’ எனத் தெரிவித்தார்.
பிரயாக்ராஜ் டிஐஜி டாக்டர் என்.கொளஞ்சி பேசும்போது, ‘‘வெறும் ஏழு சொற்களில் ஒரு குறள் ஆழமானக் கருத்துக்களை கொண்டது. பிரதமர் அறிமுகப்படுத்திய யோகா தினம் போல், உலகத் திருக்குறள் நாள் அல்லது திருவள்ளுவர் நாள் என சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த வேண்டும். கல்வித் திட்டத்தில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குறளையாவது போதிக்க வேண்டும்.
நம் நாட்டின் தேசிய பறவை, விலங்கு, மலரை போல், தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும். வட மாநிலங்களில் ஒரு மனிதன் பிறக்கும் போதே இறைவனால் எல்லாம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாக நம்பிக்கை உண்டு. ஆனால், தெய்வத்தால் ஆகாதெனினும்.. எனும் குறளின்படி இறைவனால் முடியாததையும் மனிதர் தன் முயற்சியால் வெல்ல முடியும். எனவே, இங்குள்ளவர்கள் ஒரு நாளுக்கு ஒரு குறளாவது படித்தறிவது நல்லது’’ என்று அறிவுறுத்தினார்.
இந்து தமிழ் திசை நாளிதழின் டெல்லி செய்தியாளர் ஆர்.ஷபிமுன்னா பேசுகையில், ‘‘ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு மறைநூல் உள்ளது. ஆனால், அனைத்து மதத்தினரும் ஏற்கும் ஒரே பொது நூலாக திருக்குறள் அமைந்துள்ளது. தமிழகத்தில் நண்பர்கள், தம்பதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கு இடையில் நடைபெறும் உரையாடல்களில் திருக்குறள் இடம்பெறும். உ.பி.யிலும் அதுபோன்ற நிலை உருவாக இங்கு திருவள்ளுவர் சிலை அவசியம். எனவேதான் இந்து தமிழ் திசை நாளிதழ் அதற்கான முயற்சிக்கு உதவுவதில் தீவிரம் காட்டியது’’ என்றார்.
விழாவில் பிரயாக்ராஜ் நகர மேயர் கணேஷ் சந்திர கேசர்வாணியும் கலந்து கொண்டார். சிஐசிடி இயக்குநர் முனைவர் சந்திரசேகரன் உரையை, மூத்த ஆய்வாளர் முனைவர் என்.தேவி வாசித்தார். அலகாபாத் அருங்காட்சியக இயக்குநர் முனைவர் ராஜேஷ் பிரசாத், பாஷா சங்க முன்னாள் பொதுச் செயலாளர் முனைவர் எம்.கோவிந்தராஜன், ஏ.கே.மிஸ்ரா ஆகியோர் உரையாற்றினர். பாஷா சங்கத்தின் ஆனந்த் கில்டியால் வரவேற்புரையும், சாந்தி சவுத்ரி நன்றியுரையும் வழங்கினர்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை, வாராணசியின் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) வெளியீடான அந்நூலின் அறிமுக விழாவும் நடைபெற்றது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிஐசிடி சார்பில் திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலை, திருக்குறள் இந்தி நூல் ஆகியவை வழங்கப்பட்டன. உ.பி.யில் திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்முதலில் கோரிக்கை வைத்த பாஷா சங்க
பொதுச் செயலாளர் மறைந்த கே.சி.கவுடுவின் மனைவி ரேகா கவுடுவை விருந்தினர்கள் பாராட்டி கவுரவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT