ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பிஎஸ்எப் பெண் அதிகாரிக்கு ராணுவ தளபதி பாராட்டு

நேகாவுக்கு பதக்கம் அணிவிக்கும் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி.
நேகாவுக்கு பதக்கம் அணிவிக்கும் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி.
Updated on
1 min read

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பெண் அதிகாரி நேகா பண்டாரிக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

எல்லைபாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்டாக பணியாற்றும் பெண் அதிகாரி நேகா பண்டாரி. இவர் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் பர்க்வல் என்ற இடத்தில் பணியாற்றும் படைக்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச எல்லையில் உள்ள இப்பகுதியிலிருருந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளன. அங்குள்ள நடமாட்டத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு, நேகா பண்டாரி தலைமையிலான படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இங்குள்ள எல்லை பாதுகாப்பு படை பிரிவில் நேகா பண்டாரியுடன், 6 பெண் காவலர்களும் போர் களத்தில் இறங்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இவர்களின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானின் 3 நிலைகளில் இருந்த வீரர்கள் தப்பியோடினர். அதன்பின் அங்கிருந்து தாக்குதல் நடைபெறவில்லை.

நேகா பண்டாரி தலைமையிலான படைப்பிரிவுக்கு எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ஏற்கெனவே பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி காஷ்மீர் சென்று எல்லையில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அக்னூர் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை நிலைக்கு சென்ற உபேந்திர திவிவேதி, நேகா பண்டாரி தலைமையிலான படைப்பிரிவினரை சந்தித்து பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

இது குறித்து உதவி கமாண்டன்ட் நேகா பண்டாரி கூறுகையில், ‘‘இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள நிலைக்கு எனது தலைமையிலான படைப்பிரிவு தலைமை தாங்கியதில் பெருமிதம் கொள்கிறேன். எனது தாத்தா ராணுவத்தில் பணியாற்றினார். எனது பெற்றோர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) பணியாற்றினர். நான் பாதுகாப்பு படையில் பணியாற்றும் 3-ம் தலைமுறை அதிகாரி’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in