Last Updated : 26 May, 2025 03:18 PM

 

Published : 26 May 2025 03:18 PM
Last Updated : 26 May 2025 03:18 PM

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக தேசிய புலனாய்வு முகமை (NIA) திங்கள்கிழமை (மே 26) CRPF பணியாளர் ஒருவரைக் கைது செய்தது. அவர் கைது செய்யப்பட்ட உடனேயே மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவரை பணிநீக்கம் செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட மோதி ராம் ஜாட் என்ற அந்த நபர் CRPF-இல் உதவி துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார். உளவு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 2023 முதல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் (PIOs) பகிர்ந்து கொண்டதாக NIA தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் பல்வேறு வழிகள் மூலம் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து நிதி பெற்றதாக NIA கண்டறிந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த மோதி ராம் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 6 ஆம் தேதி வரை என்ஐஏ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானுடனான மோதி ராம் ஜாட்டின் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து CRPF, மோதி ராம் ஜாட்டை இன்று பணியிலிருந்து நீக்கியது.

“மத்திய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து CRPF பணியாளர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை நெருக்கமாகக் கண்காணித்ததில், ஒரு நபர் நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை மீறிச் செயல்பட்டது கண்டறியப்பட்டது. அவர் விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளின்படியும், CRPF விதிகளின்படியும் ​​அந்த நபர் 21.05.2025 முதல் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று CRPF தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x