ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை சாகும் வரை பட்டினி போட்ட பெற்றோர்

ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை சாகும் வரை பட்டினி போட்ட பெற்றோர்

Published on

இந்தூர்: ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி, உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் தேதி உயிரிழந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், ‘சந்தாரா’ என்ற சமண சடங்கை சபதம் செய்த உலகின் இளைய நபர் வியானா என்று ‘கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியானதால் இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் மும்பையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் குழந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும், கடந்த மார்ச் மாதம் நிலைமை மோசமடைந்துள்ளது. மருத்துவ ரீதியிலான முயற்சி தோல்வி அடைந்ததால், ஆன்மிக தலைவரின் ஆலோசனையைக் கேட்டு சந்தாராவில் ஈடுபடுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சமண மதத்தில் சந்தாரா அல்லது சல்லேகானா அல்லது சமாதி மாறன் என்ற வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இது உணவு மற்றும் தண்ணீரை படிப்படியாக கைவிடுவதன் மூலம் தாமாக முன்வந்து இறப்பதற்கான ஒரு மத சபதம் ஆகும். இது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு வழியாக கருதுகின்றனர்.

இந்த வழக்கம் ஒரு வகையான தற்கொலை என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனாலும், இந்த வழக்கத்தில் சிறார்களை ஈடுபடுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, வியானாவின் பெற்றோர் அல்லது ஆன்மிக தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in