குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயற்சி
Updated on
1 min read

ஹைதராபாத்: குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன.

தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டம், தரம்பூரி அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 30 மாணவ, மாணவியரும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். இதற்கு சற்று முன்னதாக பள்ளிக்கு வந்த மதிய உணவு திட்ட ஊழியர்கள், பாத்திரங்களை கழுவ முடிவுசெய்து, குழாயில் இருந்து தண்ணீரை திறந்தபோது அதில் துர்நாற்றம் வீசியுள்ளது.

உடனே குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை பார்த்தபோது, அதுவும் நிறம்மாறி துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே மாணவர்கள் யாரும் தண்ணீர் குடிக்க வேண்டாம் என தலைமை ஆசிரியர் எச்சரித்தார். இது குறித்து இச்சோடா போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸார் விரைந்து வந்து நிபுணர்கள் மூலம் தண்ணீரை சோதனையிட்டதில், அதில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது அம்பலானது.

இதுபற்றி அறிந்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இச்சோடா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in