கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானா சுரங்க விபத்து: 30 நாட்களுக்கு பின்பு மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிப்பு!

Published on

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்நூல் பகுதியில் உள்ள எஸ்எல்பிசி சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் இரண்டாவது நபரின் உடலை மீட்புக் குழுனர் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் கடினமான நிலையில் சிக்கியுள்ள அந்த உடலை மீட்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகையில், “இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில், சுரங்கத்தினுள் சிக்கியுள்ள மற்றொரு தொழிலாளியின் உடலை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அதை மீட்கும் முயற்சியில் உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

தெலங்கானாவின் ஸ்ரீசைலம் இடதுகரை வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தின் ஒரு பகுதி பிப்.22ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் குர்ப்ரீத் சிங் என்ற தொழிலாளியின் உடல் மார்ச் 9-ம் தேதி மீட்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனிடையே எஸ்எல்பிசி சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வரும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் மீட்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திங்கள்கிழமை முதல்வர் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில், “உயரதிகாரிகள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 25 அமைப்புகளை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 700 தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 14 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையின் கடைசியில் விபத்து நடந்துள்ளதால்,மோசமான காற்று மற்றும் ஒளி காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகி வருகிறது. விபத்து நடந்த 30 மீட்டர் பகுதி மிகவும் ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.” என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in