மத ரீதியிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: ஆர்எஸ்எஸ்

மத ரீதியிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: ஆர்எஸ்எஸ்
Updated on
1 min read

பெங்களூரு: இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். மேலும், அத்தகைய இட ஒதுக்கீடு நமது அரசியலமைப்பை வடிவமைத்த பி.ஆர். அம்பேத்கருக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது விவாதத்துக்குள்ளாகி வரும் நிலையில் தத்தாத்ரேயா இவ்வாறு கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உயர் முடிவுகள் எடுக்கும் அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கடைசி நாளில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு மத ரீதியிலான இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. யாராவது அவ்வாறு செய்தார்களேயானால் அவர்கள் நமது அரசியல் சிற்பிக்கு எதிரானவர்கள்.

முன்பிருந்த ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எடுத்த முந்தைய முயற்சிகளை உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறான இடஒதுக்கீடு விதிமுறைகளை நிராகரித்துள்ளன" என்றார்.

மகாராஷ்டிராவில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஹேசபலே, "அவுரங்கசீப் ஒரு சின்னமாக மாற்றப்பட்டார். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அவரது சகோதரர் தாரா ஷிகோக் அவ்வாறு மாற்றப்படவில்லை.

இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிரானவர்கள் மக்களிடத்தில் சின்னங்களாக மாற்றப்பட்டார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர்கள் சுதந்திரப்போராட்ட வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களுக்கு எதிராக போராடியவர்கள் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை.

முகலாய மன்னன் அக்பருக்கு எதிராக போராடிய ராஜபுத்திர அரசன் மாகாராணா பிரதாப்பை நாம் பாராட்டவேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மனநிலையுடன் இருப்பவர்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானவர்கள். இந்திய நெறிமுறையுடன் இருப்பவர்களுடன் நாம் சேர்ந்து நிற்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக நடந்த முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்து பேசிய ஹோசபலே, "இந்த விஷங்கள் தொடர்பாக அரசியலில் இருப்பவர்கள் தினமும் அறிக்கை வெளியிடலாம். அவர்களுக்காக அதைச் செய்கிறார்கள், ஏனெனில் அது அவர்களின் செயல்பாடு.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத, எந்த ஒரு வரைவும் வெளியிடப்படாத நிலையில், ஆர்எஸ்எஸ் அதுகுறித்து கருத்து கூற முடியாது. அதனால் இதுபோன்ற விஷயங்களுக்கு பதில் அளிக்க முடியாது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in