பிரியாணி சாப்பிடும்போது பெண்ணின் தொண்டையில் சிக்கிய எலும்பு: 8 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் நீக்கம்

பிரியாணி சாப்பிடும்போது பெண்ணின் தொண்டையில் சிக்கிய எலும்பு: 8 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் நீக்கம்

Published on

சிக்கன் பிரியாணி சாப்பிடும்போது பெண்ணின் தொண்டையில் எலும்பு சிக்கியதால் அவர் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டது. 8 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்த எலும்பு அகற்றப்பட்டதால் தற்போது அந்த பெண் நலமாக உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ரூபி ஷேக் (பெயர் மாற்றப்பட்டது). 34 வயதாகும் இவர் 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவரது கணவர் ஷேக், மும்பையிலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 3-ம் தேதி கணவர் ஷேக், 2 குழந்தைகளுடன் ரூபி அருகிலுள்ள ஓட்டலுக்கு சிக்கன் பிரியாணி சாப்பிடச் சென்றார். அவர் ஆசையாய் சிக்கனை சுவைத்துக் கொண்டிருந்தபோது ஒரு சிறிய அளவிலான எலும்பு அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபி, அதை விழுங்கப் பார்த்தார். ஆனால் விஷங்க முடியவில்லை. வெளியே எடுக்கவும் முடியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அருகிலுள்ள கிரிட்கேஷ் ஆசியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரது தொண்டையில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தனர். பின்னர் சிடி ஸ்கேனும் எடுத்தனர். அப்போது அவரது தொண்டையில் 3.2 சென்டிமீட்டர் நீளமுள்ள எலும்பு சிக்கியிருந்தது.

இதைடுயத்து அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அதை வெளியே எடுத்தனர். இந்த அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நீடித்தது.

இதுகுறித்து காது,மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் சஞ்சய் ஹெளாலே கூறும்போது, “நோயாளி ரூபியின் துளையிடப்பட்ட உணவுக் குழாயை சரி செய்யவேண்டியிருந்தது. இதனால் ஓபன் ஆபரேஷன் செய்தோம். தற்போது ரூபி நலமுடன் உள்ளார்" என்றார். இந்த அறுவை சிகிச்சைக்காக ரூ.8 லட்சத்தை செலுத்தியுள்ளார் ரூபியின் கணவர்.

இதையடுத்து இனிமேல் சிக்கன் பிரியாணி சாப்பிடவோ அல்லது தயாரிக்கப் போவதில்லை என்று ரூபி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in