

போபால்: சட்டபூர்வமான பரிந்துரைகள் இருந்தாலும், சிபிஐ இயக்குநர் போன்ற நிர்வாகிகள் நியமனத்தில் தலைமை நீதிபதி எவ்வாறு தலையிட முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள குடியரசு துணைத் ஜக்தீப் தன்கர் தலைவர், இதுபோன்ற விதிகளை மாற்ற வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "என்னுடைய பார்வையில், நமது அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு, மிகவும் விவாதத்துக்குரிய நீதித்துறை சார்ந்த அடிப்படைகளைக் கொண்டுள்ளது. உங்களின் மனதினை தூண்டுவதற்காக ஒன்று, நம்மைப் போன்ற ஒரு நாட்டில் அல்லது எந்த ஒரு ஜனநாயக அமைப்பில் சட்டப்பூர்வ பரிந்துரையின் படியே இருந்தாலும், இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எவ்வாறு சிபிஐ இயக்குநர் தேர்வில் ஈடுபட முடியும்.
இதற்கு ஏதவாது சட்டப்பூர்வ காரணம் இருக்க முடியுமா? அன்றைய நாளில், அரசு நிர்வாகி நீதித்துறையின் ஆணைக்கு கீழ்ப்படிந்ததால் அந்த சட்டப்பூர்வ பரிந்துறை வடிவம் பெற்றிருக்கும் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதனை மாற்றுவதற்கான நேரம் இது. இந்த நடைமுறை ஜனநாயகத்துடன் ஒத்துப்போகவில்லை.
நீதித்துறையின் ஆணையின் மூலம் நிர்வாகி நியமனம் என்பது இந்த உலகிலுள்ள மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பு முரணாகும். ஒவ்வொரு நிர்வாக அமைப்பும் அரசியலமைப்பு வரம்புக்குள் செயல்பட வேண்டும்.
அரசுகள், நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு பொறுப்புகூற வேண்டும். சில நேரங்களில் வாக்காளர்களுக்கும் பொறுப்பு கூறவேண்டும். ஆனால், அரசு நிர்வாகம் அதிகாரத்தால், அவுட்சோர்ஸிங் மூலம் நிர்வகிக்கப்பட்டால் பொறுப்புகூறல் திறன் பலவீனமடையும். நிர்வாகத்தின் மீதான நாடாளுமன்ற அல்லது நீதித்துறையின் தலையீடு என்பது அரசியலமைப்புக்கு எதிரானது.
ஜனநாயகம் என்பது நிறுவனங்களை தனிமைப்படுத்துதலில் இல்லை மாறாக, ஒருங்கிணைந்த தன்னாட்சியால் செழிக்கிறது, நிறுவனங்கள் அந்தந்த தளங்களில் செயல்படும் போது செயல்பாட்டு ரீதியாகவும் சிறப்பாகவும் இருக்கும். நீதித்துறையின் பொது இருப்பு என்பது அதன் தீர்ப்புகளின் வழியாகவே இருக்க வேண்டும்.
தற்போது இருக்கும் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன்மூலம் நான் மீண்டும் தடம்பதிக்க முடியும். நமது நீதித்துறையை தூக்கி நிறுத்தும் தடமாக அது இருக்கும். உலகினை நாம் பார்த்தால், இங்கு இருப்பது போல எல்லா விவகாரங்களிலும் நீதித்துறை தலையீட்டை பார்க்க முடியாது." இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தனது பேச்சில் அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடுகளில் உள்ள பிரச்சினைகளைப் பேசினார். கேசவானந்த பாரதி வழக்கு (அதில் கோட்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது) குறித்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் அனந்த்யா அர்ஜுன் எழுதிய புத்தக்கத்தை குறிப்பிட்டு பேசிய தன்கர், “அந்த புத்தகத்தை வாசித்த பின்பு, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு, விவாதத்துக்குரிய, மிகவும் விவாதத்துக்குரிய, நீதித்துறை அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்று நான் தெரிந்துகொண்டேன்.” என்றார்.
இந்த கூட்டத்திற்கு இடையில், தேசிய நீதித்துறை அகாடமியில் தனது தாயார் கேசரி தேவியின் பெயரில் ஒரு மரத்தினை தன்கர் நட்டுவைத்தார். தொடர்ந்து மத்திய விவாசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் இளைய மகன் திருமணத்திலும் கலந்து கொண்டார்.