Published : 05 Feb 2025 01:03 PM
Last Updated : 05 Feb 2025 01:03 PM
புதுடெல்லி: மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்றனர்.
இதுவரை 38 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடி உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புனித நீராடும் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் இன்று (பிப்ரவரி 5, 2025) புனித நீராடினார். ருத்ராக்ஷ மாலை அணிந்திருந்த பிரதமர் மோடி, அதைக் கொண்டு மந்திரங்களை ஜபித்தார். பின்னர், நீருக்குள் மூழ்கி எழுந்தார். மேலும், சூரியன் மற்றும் கங்கை நதியிடம் பிரார்த்தனை செய்தார். அவருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இருந்தார்.
முன்னதாக, விமானம் மூலம் பிரயாக்ராஜுக்கு வருகை தந்த பிரதமரை, ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் அவர்கள் படகு மூலம் திரிவேணி சங்கமத்துக்கு வருகை தந்தார்கள்.
இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். இதன் காரணமாக, புனித யாத்திரைத் தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 13, 2024 அன்று பிரயாக்ராஜுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ரூ.5,500 கோடி மதிப்பிலான 167 மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT