பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

மணமகளே இல்லாமல் நடந்த திருமண ஊர்வலம்: இமாச்சல பிரதேச மாநிலத்தில் வினோதம்

Published on

மணமகளே இல்லாமல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலம் நடந்துள்ள வினோதம் தற்போது தெரியவந்துள்ளது.

இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அருகிலுள்ள சிங்கா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்துக்கு நாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ், அவரது மனைவி மானு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் இருவரும் திருமணத் தரகர்கள். இரு வீட்டாரும், ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மணமகனும், மணமகளும் போனில் மட்டுமே பேசி சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருமணம் நடத்த மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக மணமகளை அழைத்து வர சிங்கா கிராமத்துக்கு மணமகன் வீட்டார் 10 கார்களில் சென்றனர்.

அப்போது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு திருமண ஊர்வலத்துக்காக வந்துள்ளோம் என்று தெரிவித்து, பெண்ணின் புகைப்படத்தை செல்போனில் காட்டியுள்ளனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட பெண் இந்த கிராமத்தைச் சேர்ந்தவரே இல்லை என்றும், இங்கு ஏதும் திருமண ஏற்பாடுகள் நடைபெறவில்லை என்றும் சிங்கா கிராமத்து பஞ்சாயத்து தலைவர் குருதேவ் சிங் கியானி தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட மணமகன் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது மணமகன் குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதையடுத்து திருமணத் தரகர்கள் ராஜீவ், மானுவை அழைத்து விசாரித்தனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ராஜீவும், மானுவும், அந்த பெண்ணை அழைத்து வருவதாகக் கூறி காரில் தப்பிச் சென்றனர். திருமணத்துக்காக தரகர்கள் இருவரும் மணமகன் வீட்டாரிடம் ரூ.50 ஆயிரத்தை ஏற்கெனவே பெற்ற விவரமும் தெரியவந்தது.

மணமகள் இல்லாமலேயே கிராமத்தில் அவர்கள் திருமண ஊர்வலம் நடத்தி ஏமாந்தோம் என்று மணமகள் வீட்டார் ஆத்திரப்பட்டனர்.பின்னர் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து விசாரணை நடத்தினர். இதனிடையே போலீஸார், போன் செய்து ராஜீவ், மானுவிடம் விசாரித்தபோது, மணப்பெண் விஷத்தைக் குடித்து விட்டார் என்றும் அவரை பஞ்சாபிலுள்ள நவன்ஷெகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றும் பொய்யான தகவல்களைக் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக ஹரோலி பகுதி போலீஸ் டிஎஸ்பி மோகன் ராவத் கூறும்போது, “மணப்பெண் வீட்டாரிடம் திருமணச் செலவுகளைப் பெற்றுக் கொண்ட சமரசமாக போகிறீர்களா அல்லது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறீர்களா என்று மணமகன் வீட்டாரிடம் கேட்டுள்ளோம். இதுதொடர்பாக அவர்கள் இதுவரை முடிவு எடுக்கவில்லை" என்றார். இதுகுறித்து உனா சதர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in