

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வண்ணமயமான மகா கும்பமேளாவில் அதானி குழுமத்தைச் சேர்ந்த 5,000 ஊழியர்கள் தன்னார்வலர்களாக சேர்ந்து பக்தர்களுக்கு உதவி வருகின்றனர்.
இதுகுறித்து அதானி குழும அதிகாரிகள் கூறியதாவது: பெரும் கூட்டத்தை கையாளக்கூடிய விதத்தில் பயிற்சி பெற்ற அதானி ஏர்போர்ட்ஸை சேர்ந்த 300 பணியாளர்கள் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் தன்னார்வமாக இணைந்துபக்தர்களுக்கான சேவைகளை மனமகிழ்ச்சியுடன் வழங்கி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக அதானி குழுமத்தை சேர்ந்த 5,000 ஊழியர்கள் இந்த மகா கும்பமேளாவின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாடிக்கையாளர் சேவை, சரக்கு போக்குவரத்து, கூட்டத்தை கையாள்வது உள்ளிட்ட பணிகளில் ஏர்போர்ட் ஊழியர்களுக்கு ஏற்கெனவே அனுபவம் உள்ளது என்பதால் அவர்கள் பக்தர்களுக்கான சேவையை சுமுகமான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் அதிகம் மிகுந்த பகுதிகளில் முக்கியமான இடங்களுக்கு வழிகாட்டுவது, சுகாதாரத்தை பராமரிப்பது போன்ற பல்வேறு பணிகளில் பக்தர்களுக்கு உதவி வருகின்றனர். சமூகத்துக்கு தொண்டு செய்யும் வாய்ப்பாக கருதி முழு ஈடுபாட்டுடன் இந்த பணியை அவர்கள் மனப்பூர்வமாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.