

புதுடெல்லி: வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாக அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம், மிகவும் பழமையான ஜாரவா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 19 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது என மூத்த அதிகாரி இன்று தெரிவித்தார். மேலும், முன்பு இப்பழங்குடியினர் மூர்க்கமான, தனித்தவர்கள் என அறியப்பட்டார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.
குறைந்துவரும் பழங்குடியினராக அறியப்படும் ஜாரவா பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு, தெற்கு அந்தமான் மாவட்டத்திலுள்ள அவர்களுடைய குடியிருப்பு பகுதியான ஜிர்காடாங் பகுதியில் வைத்து, தலைமைச் செயலாளர் சந்தர பூஷன் குமார் அடையாள அட்டை வழங்கினார். இது குறித்து, தெற்கு அந்தமான் மாவட்ட தேர்தல் அலுவலர் அர்ஜுன் சர்மா கூறும்போது, “ஜாரவா பழங்குடியினரின் தனித்துவமான அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கும், அவர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கும் ஒரு விரிவான நடவடிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
வாக்காளர் பட்டியலில் ஜாரவா பழங்குடியினரின் சேர்க்கை என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அதிக தலையீடு இல்லாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. என்றாலும், இந்தியாவின் குடிமக்கள் என்பது பற்றிய அவர்களது புரிதல் அதிகமாக உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியில் இது மிகவும் முக்கியமான மைல் கல்லாகும்.
அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. உள்ளடக்குதல் மற்றும் கலாச்சார பாதுகாப்பு ஆகியவற்றின் இடையே கவனமான சமநிலை இருக்கும் வகையில், இந்த செயல்முறையின் எந்த ஒரு நடவடிக்கையும் ஜாரவா மக்களின் கண்ணியத்தை சமரசம் செய்யாது என்று நாங்கள் உறுதி அளித்துள்ளோம்.
இந்த சாதனையில் அந்தமான் ஆதிம் ஜன்ஜதி விகாஸ் சமிதி (AAJVS) முக்கியப் பங்காற்றியது. அது கலாச்சார ரீதியாக தேர்தல் நடைமுறையின் பற்றிய பொருத்தமான விழிப்புணர்வை, மரியாதைக்குரிய வகையில் ஜாரவா பழங்குடியினரிடம் உருவாக்குவதன் மூலமாக இந்த செயல்முறையை எளிமையாக்கியது. பழங்குடியினரின் பாரம்பரிய புரிதலுக்கு ஏற்றவாறு, தேர்தல்களின் முக்கியத்துவத்தையும், ஆட்சியை வடிவமைப்பதில் அதன் பங்களிப்பையும் விளக்கி, அவர்களின் தனித்துவமான கலாச்சார கட்டமைப்பையும் சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ளப்பட்டது” என்று சர்மா தெரிவித்தார்.
மேலும் அவர், "ஜாரவா பழங்குடியினரின் முதல் நட்புறவுத் தொடர்பு என்பது கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்டது. இது வெளியுலகத்தினருடனான அவர்களின் தொடர்பில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஜாரவா பழங்குடினத்தைச் சேர்ந்த என்மேய் என்ற 21 வயது இளைஞரின் இடது கணுக்காலில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் சிரமப்பட்டபோது, அதற்கான தொடக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிர்வாகம் அந்தப் பழங்குடியின இளைஞரின் பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது. அவர் முழுவதுமாக குணமடைந்த பின்பு அவர் பாதுகாப்பாக தனது குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜாரவா பழங்குடியினருக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஏற்படுவதற்கு இந்தச் சம்பவம் முக்கியமானதாக அமைந்தது" என்று இந்த முயற்சிக்கான பின்னணியை விளக்கினார்.
ஜாரவாக்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள பழங்குடியினங்களில் ஒன்றாகும். இவர்கள் பின்பற்றும் பாதி நாடோடி வாழ்க்கை, காட்டு வளங்களை நம்பி இருப்பது மற்றும் இயற்கைச் சூழலுடனான அவர்களின் ஆழமான பிணைப்பு போன்றவற்றுக்காக தனித்து அறியப்படுபவர்கள்.
வரலாற்று ரீதியாகவே ஜாரவாக்கள் வெளியுலகத் தொர்புகளில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள். தனித்துவமான தங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகின்றனர். அந்தமான் நிக்கோபர் தீவுகளின் மத்தியப் பகுதி மேற்கு கடற்கரையோரங்களில் அவர்கள் வாழ்கின்றனர். அங்கு நிலவிவரும் பல்லுயிர் சூழல் அவர்களின் பாரம்பரிய வாழ்வினை பாதுகாக்க உதவுயாக உள்ளது.