

புதுடெல்லி: 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்ததது. இந்த காப்பீட்டு அட்டை வேண்டி இதுவரை 5 லட்சம் பேர் தங்களது விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக 1.66 லட்சம் முதியவர்கள் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கேரளா உள்ளது. இம்மாநிலத்திலிருந்து 1.28 லட்சம் பேர் காப்பீடு அட்டை கோரி பதிவு செய்துள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடரந்து, உத்தர பிரதேசத்திலிருந்து 69,044, குஜராத்திலிருந்து 25,491 முதியவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேசிய சுகாதார ஆணையம் கூறுகையில், “வருமான அளவுகோலின்றி நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்துமுதியவர்களும் சிகிச்சை பெறும் வகையில் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம், ஆயுஷ்மான் பாரத்என்ற பெயரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது. இதுவரையில் 5 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டை கோரி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் 4.69 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றது. இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, ஏழை குடும்பங்கள் மற்றும் ஒரு சில பிரிவுகளை சேர்ந்த பணியாளர்கள் மட்டுமே பயன்பெறக் கூடிய நிலையில் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.