

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, 86 வயதில் இயற்கை எய்தினார். சமானிய மக்கள் தொடங்கி கோடீஸ்வரர்கள் வரை அனைவரின் உள்ளங்களிலும் நீக்கமற இடம் பிடித்திருக்கிறார் ரத்தன் டாடா. அவரின் தொழில் வாழ்க்கையைப் போலவே, தனிப்பட்ட வாழ்க்கையும் சற்று சுவாரஸ்யமாகதான் இருக்கிறது. அவர் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே வேளையில், 2020 ஆம் ஆண்டு, ஒரு பேட்டியில் ரத்தன் டாடா தனது குழந்தைப் பருவம், காதல் தோல்வி, பெற்றோரின் விவாகரத்து குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது தற்போது அவரது மறைவுக்குப் பின்னர் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், ‘என்னுடைய குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாகதான் அமைந்திருந்தது. ஆனால் எங்கள் பெற்றோர் விவாகரத்து பெற்றுக் கொண்டதன் காரணமாக நானும், என் சகோதரனும் பல்வேறு கேலிகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானோம். என் அம்மா மறுமணம் செய்து கொண்ட பிறகு, பள்ளியில் உள்ள சக மாணவர்கள், நண்பர்கள் அனைவரும் எங்களைப் பற்றி மோசமாக பேசத் தொடங்கினார்கள். அது எங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தை அளித்தது. ஆனால் எங்களுடைய பாட்டி எங்களை நன்றாக வளர்த்தார். எந்தச் சூழல் வந்தாலும், கண்ணியத்துடன் எப்படி வாழ வேண்டும் என கற்றுக் கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “கல்லூரி முடித்ததற்கு பிறகு, அமெரிக்காவுக்கு (லாஸ் ஏஞ்சல்ஸ்) படிக்கச் சென்றேன். அங்கு ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன், இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். அழகான வானிலை... எனக்கு சொந்தமாக ஒரு கார் இருந்தது. எனது வேலையை நான் விரும்பி செய்தேன் இவ்வாறு நல்லபடியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அதோடு ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால், சுமார் 7 ஆண்டுகளாக பாட்டியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அவருக்காக இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு நகர முடிவு செய்து இந்தியாவுக்கு சென்றேன். பின்னர் நான் விரும்பிய பெண்ணை பார்க்க திரும்பி அமெரிக்காவுக்கு வந்தேன், எனது காதலியும் என்னுடன் இந்தியா வருவார் என்று எண்ணினேன். ஆனால் அந்த நேரத்தில் இந்தியா-சீனா போர் வெடித்தது. இதனால் எனது காதலியின் பெற்றோர் அவரை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். அப்படியே எங்களுடைய உறவும் முடிந்தது.” என்றார். கிட்டத்தட்ட அப்பெண்ணை டாடா மனதளவில் திருமணம் செய்துவிட்டதாகவே அப்பேட்டியில் விவரித்திருப்பார்.
இந்த சம்பவம்தான் ரத்தன் டாடாவின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது என்றால் மிகையாகாது. ரத்தன் டாடாவின் குடும்பத்தினர் அவரை பல முறை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினர் ஆனால் அவர் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பின்னர் தொழிலுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். காதல் தோல்வியில் இருந்து மீண்டு, தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக்கொண்டார் என்பது நமக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது.
மேலும், செல்லப்பிராணிகள் மீது அலாதியான பிரியம் வைத்திருந்த ரத்தன் டாடா, நாய்கள் மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தார். அவரது பாட்டி, நவாஜ்பாய் டாடா, அவரது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
இந்தியா தனது தலைசிறந்த மகன்களில் ஒருவரை இழந்து தவிக்கும் நிலையில், ரத்தன் டாடாவின் வாழ்க்கை தலைமைத்துவம், பணிவு மற்றும் ஒரு பெரிய நோக்கத்திற்காக செய்யப்பட்ட தியாகங்கள் உள்ளிட்டவை நீடித்த சான்றாக நிற்கிறது. அவரது மேம்பட்ட தியாக உணர்வு வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.
யார் இந்த டாடா?: மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.
பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியனாக இருப்பதே எனது அதிர்ஷ்டம்: கடந்த 2021-ல் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் தெரிவித்தபோது, அதை தவிர்க்குமாறு தனது பதிவின் மூலம் கேட்டுக் கொண்டார். ‘விருதுகளை காட்டிலும் இந்தியனாக இருப்பதே எனது அதிர்ஷ்டம்’ என அப்போது அவர் சொல்லி இருந்தார்.
இந்திய சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் டாடா நிறுவன வாகனங்களை கடந்தே பயணிக்க வேண்டி உள்ளது. அது தனது தொழில் சாம்ராஜ்யம் மூலம் மக்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட பிணைப்பு.