Published : 04 Oct 2024 06:59 PM
Last Updated : 04 Oct 2024 06:59 PM
புதுடெல்லி: “ஒருபுறம் மோடி அரசாங்கம் போதைப் பொருட்கள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது. அதேவேளையில், இளைஞர்களை போதைப் பொருட்களின் இருண்ட உலகத்துக்கு காங்கிரஸ் அழைத்துச் செல்ல விருப்புகிறது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
தெற்கு டெல்லியில் புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5,600 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியான துஷார் கோயல் கைது செய்யப்பட்டார். இவருக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. இதனிடையே, போதைப் பொருள் கடத்தலுக்கு பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் துஷார் கோயலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் மறுத்துள்ளது.
இந்நிலையில், அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில், “ஒருபுறம் மோடி அரசாங்கம் போதைப் பொருள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் (zero-tolerance policy) உறுதியாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் இளைஞர்களை போதைப் பொருட்களின் இருண்ட உலகத்துக்கு அழைத்து செல்ல விருப்புகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது போதைப் பொருளால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் படும் அவலத்தை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். மோடி அரசு இளைஞர்களை விளையாட்டு, கல்வி மற்றும் புதுமைகளை நோக்கி அழைத்துச் செல்லும் அதே வேளையில், அவர்களை போதைப் பொருளின் இருண்ட உலகத்துக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் விரும்புகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இளைஞர்களை போதைப் புதைகுழிக்குள் தள்ளும் பாவத்தை செய்கிறார்கள். ஆனால், போதைப் பொருள் இல்லாத இந்தியாவுக்காக மோடி அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிக்கிறது. அதேவேளையில், வட இந்தியாவில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.5,600 கோடி போதைப் பொருட்களில் ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவரின் தொடர்பு மிகவும் ஆபத்தானது மற்றும் வெட்கக்கேடானது” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT