நடிகை சோனா வீட்டில் புகுந்த திருடர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியதால் பரபரப்பு

நடிகை சோனா வீட்டில் புகுந்த திருடர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியதால் பரபரப்பு
Updated on
1 min read

சென்னை: நடிகை சோனா வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற கொள்ளையர்கள், கத்தி முனையில் மிரட்டி விட்டு தப்பி உள்ளனர்.

தமிழ் திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா ஹைடன் (45). 2002-ல் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றுள்ள இவர் ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானார். ‘குரு என் ஆளு’, ‘அழகர் மலை’, ‘ஒன்பதுல குரு’, ‘ஜித்தன் 2’ உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சோனா சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், மதுரவாயல் கிருஷ்ணா நகர் 2-வது பிரதான சாலை, 28-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அடிக்கடி ஷூட்டிங் செல்வதால் இவரது வீடு பெரும்பாலும் பூட்டியே இருக்கும். இதை நோட்டம் விட்ட திருடர்கள் மாலை 4 மணியளவில் அவரது வீட்டின், சுற்று சுவர் ஏறிக் குதித்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டின் போர்டிகோவில் வைத்திருந்த ஏ.சி இயந்திரத்தின் வெளிப்புற யூனிட்டை திருட முயன்றுள்ளனர். அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களை பார்த்து தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்துள்ளது. சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையர்கள், அவர் கத்தி கூச்சலிட்டு விடக்கூடாது என்பதற்காக இரண்டு திருடர்களில் ஒருவர், கத்தி முனையில் சோனாவை மிரட்டி பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர்.

இதுகுறித்து நடிகை சோனா தரப்பில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக, சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து தப்பிய திருடர்கள் குறித்து போலீஸார் துப்புத் துலக்கி வருகின்றனர். சோனா வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டிச் சென்ற சம்பவம் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in