Published : 21 Aug 2024 08:18 PM
Last Updated : 21 Aug 2024 08:18 PM
புதுடெல்லி: தற்போது பதவியில் இருக்கும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 151 பேர் தங்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாக ஏடிஆர் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இதில், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.
இந்த அறிக்கைக்காக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்), கடந்த 2019 முதல் 2024 வரையிலான தேர்தல்களின்போது, தற்போது எம்.பி., எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த 4,809 பிரமாணப் பத்திரங்களில் 4,693 பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. அதில், 16 எம்.பி.கள், 135 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சந்தித்து வருவது தெரியவந்தது.
இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் தற்போது பதவியில் இருக்கும் 25 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 21 பேர், ஒடிசாவில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அறிக்கையின்படி, தற்போது பதவியில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.களில் 16 பேர், பாலியல் வன்கொடுமைத் தொடர்பான வழக்குகள் தங்கள் மீது இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றங்களுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம். இந்த 16 பேரில் இருவர் எம்.பி.கள், 14 பேர் எம்.எல்.ஏ.க்கள்.
கட்சிகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளும் எம்.பி., எம்எல்ஏக்களில் 54 உறுப்பினர்ளைக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 23 உறுப்பினர்களுடன் இரண்டாவது இடத்திலும், தெலுங்கு தேசம் கட்சி 17 உறுப்பினர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் தலா 5 உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அறிக்கையின் மூலம் வெளிப்பட்டிருக்கும் இந்த விவகாரத்துக்கு சில வலுவான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி உள்ளவர்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதை தவிர்க்குமாறு தீவிரமாக வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT