போலி நீதிமன்ற ஆணைகள் மூலம் 129 இணையதளங்கள் முடக்கம்

மத்திய தொலைத்தொடர்பு செயலாளருக்கு பிரதமர் அலுவலகம் சம்மன்
போலி நீதிமன்ற ஆணைகள் மூலம் 129 இணையதளங்கள் முடக்கம்
Updated on: 
2 min read

புதுடெல்லி: போலி நீதிமன்ற ஆணைகள் மூலம் 129 இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர் விளக்கம் அளிக்கக் கோரி பிரதமர் அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த ஜூலை 19-ம் தேதி மத்திய தொலைத்தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஒரு ஆணை அனுப்பப்பட்டது. அதில் 34 சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த ஜூலை 21-ம் தேதி மத்திய தொலைத்தொடர்புத் துறை 34 இணையதளங்களையும் முடக்க இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. உடனடியாக அந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மத்திய தொலைத்தொடர்பு துறையின் இ-மெயில் முகவரிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒரு ஆணை அனுப்பப்பட்டது. அதில் 95 சூதாட்ட இணையதளங்களை முடக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த செப்டம்பர் 2-ம் தேதி 95 இணையதளங்களையும் முடக்க இணையசேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது. உடனடியாக அந்த இணையதளங்களும் முடக்கப்பட்டன.

இரு உயர் நீதிமன்றங்களின் ஆணைகளின்படி 129 இணையதளங்கள் முடக்கப்பட்டதாக மத்திய தொலைத் தொடர்பு துறை சார்பில் ஊடகங்களுக்கு அறிக்கைகள் அளிக்கப்பட்டன. குறிப்பிட்ட இரு நீதிமன்ற ஆணைகளின் விவரங்களை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட ராஜஸ்தான், அலகாபாத் உயர் நீதிமன்றங்களின் இணையங்களில் வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் தேடினர். ஆனால் அந்த ஆணைகள் தொடர்பாக உயர் நீதிமன்ற இணையதளங்களில் எவ்வித தகவலும் இல்லை. அவை போலி ஆணைகள் என்பது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சார்பில் கடந்த 6-ம் தேதி உத்தர பிரதேச போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதேபோல ராஜஸ்தான் போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர் அமித் அகர்வாலுக்கு பிரதமர் அலுவலகம் நேற்று சம்மன் அனுப்பியது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, “போலி நீதிமன்ற ஆணைகள் மூலம் சூதாட்ட இணையதளங்கள் மட்டும் குறிவைக்கப்பட்டு உள்ளன. நீதிமன்ற ஆணைகளின் உண்மைத்தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தொலைத்தொடர்பு துறை செயலாளரிடம் விரிவான விளக்கம் கோரப்படும்” என்று தெரிவித்தன.

உத்தர பிரதேச போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கரிமா பிரசாத் பெயரில் போலி ஆணை தயாரிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற அலுவலர் என்ற பெயரில் கார்த்திகேய பாண்டே என்பவர் இ-மெயிலை அனுப்பி உள்ளார். இதேபோல ராஜஸ்தான் உயர் நீதிமன்ற போலி ஆணையை ஆர்யன் சவுத்ரி என்பவர் இ-மெயிலில் அனுப்பி உள்ளார்.

இரு நீதிமன்ற ஆணைகளும் அச்சு அசல் போலவே உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த போலி ஆணைகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடிக்கு காரணமானவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போலி நீதிமன்ற ஆணைகள் மூலம் 129 இணையதளங்கள் முடக்கம்
ஓலா, ஊபர், ஜொமோட்டோ உள்ளிட்ட செயலி மூலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள் தொடங்கினார் ராகுல்

X