“இது ஒன்றும் மதரஸா அல்ல” - உ.பி.யில் தாடியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் நீக்கப்பட்டதால் சர்ச்சை

உத்தரப் பிரதேச பள்ளி - கோப்புப்படம்
உத்தரப் பிரதேச பள்ளி - கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாடியுடன் வகுப்புக்கு வந்த மாணவரும், அவருக்கு ஆதரவாக இருந்த சகோதரரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், "மதரஸாவை போல் தாடி வளர்க்க பொதுக் கல்வி நிலையத்தில் அனுமதி இல்லை" என அப்பள்ளி முதல்வர் மாணவர்களை கண்டித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலுள்ள பரேலியை அடுத்த நயி பஸ்தியை சேர்ந்தவர் ஜிஷான் அலி. இவர், தம் வீட்டின் அருகிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த ஒரு மாதமாக தாடி வளர்த்துள்ளார். தாடியுடன் பள்ளிக்கும் சென்ற அவரை ஒருநாள் பார்த்த அந்தப் பள்ளி முதல்வர், ஜிஷான் அலியை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது, 'தாடியுடன் பள்ளிக்கு வரக் கூடாது' என மாணவர் ஜிஷானிடம் கண்டித்துள்ளார்.

மேலும், ‘‘தாடியுடன் பள்ளிக்கு வர இது ஒன்றும் மதரஸா அல்ல. பொதுக் கல்வி நிலையங்களில் இதுபோல் தாடியுடன் வர அனுமதியில்லை. இதர மாணவர்களை போல் இந்த பள்ளிக்கான விதிமுறைகளை மதித்து இருக்க வேண்டும். இல்லையேல் தாடி வளர்ப்பது போன்ற விதிகளை மீறும் எவருக்கும் இந்தப் பள்ளியில் இடமில்லை’’ எனக் கூறி பள்ளி முதல்வர் எச்சரித்துள்ளார்.

மாணவர் ஜிஷானுக்கு ஆதரவாக அதே பள்ளியில் பயிலும் அவரது சகோதரரும் முதல்வரிடம் வந்து முறையிட்டுள்ளார். அப்போது 'முஸ்லிம்கள் என்பதால் தாடியுன் பள்ளிக்கு வருவோம். இதுபோல் தாடிக்கு மறுப்பு விதிக்கும் அரசு சட்டம் எதுவும் இருந்தால் காட்டும்படியும்' மாணவர் ஜிஷானின் சகோதரர், பள்ளி முதல்வரிடம் வாதிட்டுள்ளார். இதனால், கோபமடைந்த பள்ளி முதல்வர், சகோதரர்கள் இருவரையும் சேர்த்து பள்ளியிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, பரேலி பள்ளியில் மாணவர்கள் மற்றும் முதல்வருக்கு இடையே நடைபெற்ற இந்த வாக்குவாதங்களை சில மாணவர்கள் மொபைல்களில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. தொடர்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவர்கள், பரேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு புகார்களை அனுப்பி பதிலுக்காகக் காத்திருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in