உ.பி. மதரஸா மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மதரஸா கல்விச் சட்டம் 2004-ன் படி அந்த மாநிலத்தில் செயல்படும் மதரஸாக்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை உத்தர பிரதேசம் முழுவதும் செயல்படும் மதரஸாக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் மாநிலம் முழுவதும் 15,613 மதரஸாக்கள் செயல்படுவதும் 8,441 மதரஸாக்கள் அங்கீகாரம் பெறவில்லை என்பதும் தெரியவந்தது. பெரும்பாலான மதரஸாக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தமாநில அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே அன்சுமன் சிங் ரத்தோர் என்பவர் மதரஸாக்கள் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் விவேக் சவுத்ரி, சுபாஷ் வித்யார்த்தி விசாரித்து நேற்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தனர்.

அதில், ‘‘உத்தர பிரதேச மதரஸாகல்விச் சட்டம் 2004 அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இந்தசட்டம் மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் உத்தர பிரதேச மதரஸாக்களுக்கு இனிமேல் மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படாது. இதுகுறித்து முஸ்லிம்கள் தரப்பில் கூறும்போது, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in