ஒரு தலித் முதல்வராவதற்காக எனது பதவியை தியாகம் செய்யத் தயார்: சித்தராமையா

ஒரு தலித் முதல்வராவதற்காக எனது பதவியை தியாகம் செய்யத் தயார்: சித்தராமையா

Published on

ஒரு தலித் கர்நாடகா மாநில முதல்வராவதற்காக தனது முதல்வர் பதவியை விட்டுத்தர தயாராக இருப்பதாக சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நேற்று (மே 12) நடந்து முடிந்தது. நேற்று நடந்த தேர்தலில் 72 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் சில பாஜகவுக்கு ஆதரவாகவும் சில கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் கருத்து தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில், டிவி- 9 கன்னட சேனலுக்கு பேட்டியளித்த சித்தராமையா, ஒரு தலித் கர்நாடகா மாநில முதல்வராவதற்காக தனது முதல்வர் பதவியை விட்டுத்தர தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்திய தாக்கமாக இருக்கக் கூடும் எனப் பேசப்படுகிறது. கர்நாடகா காங்கிரஸில் மல்லிகார்ஜூன கார்கே, ஜி.பரமேஸ்வரா போன்ற தலித் தலைவர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு காங்கிரஸ் 108 முதல் 118 சீட்கள் வரையில் பெற்று தனிப் பெருங்கட்சியாக உருவெடுக்கும் என்றும் பாஜக 79 முதல் 92 சீட்கள் வரை பெறும் என்றும் கூறியுள்ளது.

ஏபிபி சி- வோட்டர் நிறுவனமானது பாஜகவுக்கு 101 முதல் 113 சீட்கள் வரை கிடைக்கும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 82 முதல் 94 சீட்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு பாஜக 114 சீட்களுடன் தனிப் பெரும்பான்மை பெரும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 73 முதல் 82 சீட்கள்தான் கிடைக்கும் என அந்த சேனல் கூறுகிறது.

இப்படியாக கலவையான கருத்துக் கணிப்புகள் வந்துள்ளன. கடந்த 2013 தேர்தலில் காங்கிரஸ் 122 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக வெறும் 40 இடங்களையே பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in