Published : 11 Jun 2024 05:47 AM
Last Updated : 11 Jun 2024 05:47 AM

ஒரே பக்கமாக சாய்ந்த தராசு முள்: ஜெகனின் அரசியல் எதிர்காலம் குறித்து விரிவாகப் பேசும் ஆந்திர மக்கள்

ஜெகன் மோகன்

அமராவதி: 2019 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்காலம் முடிவுக்கு வந்து விட்டதாக பலர் பேசினர். சந்திரபாபு நாயுடு மீண்டெழுவது முடியாத காரியம் என நினைத்தனர். ஆனால், அதன் பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த அரசியல் அனுபவத்தால் அவர் தற்போது மீண்டெழுந்துள்ளார்.

ஆந்திராவின் முதல்வராக மட்டுமல்ல, மத்தியில் ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அளவுக்கு மீண்டுள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எவ்வளவு தரக்குறைவாக இவரை விமர்சித்தாலும் இவர் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இவர் தனது கடமையை ஆற்றினார். மக்கள் பக்கம் நின்றார். இப்படி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததும் அதே மக்கள் தற்போது தெலுங்கு தேசம் கூட்டணிக்கு முடிசூட்டியுள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு முன், சந்திரபாபு நாயுடு கதை முடிந்து விட்டது என கூறியவர்கள் இன்று அவரது அரசியல் அனுபவத்தால் வந்த வெற்றியையும், தேசிய அரசியலில் அவரின் பங்கையும் பக்கம் பக்கமாக எழுதியும் பேசியும் வருகின்றனர்.

அதேவேளையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் எதிர்காலம் குறித்தும் ஆந்திர மக்கள் விரிவாகப் பேசி வருகின்றனர்.

2011-ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கினார். 2014 தேர்தலில் ஆந்திராவில் அக்கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக உருவானது. ஆனால், 2019-ல் இக்கட்சி 151 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் கட்சியாக உருவெடுத்தது.

அப்போது தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. இதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியின் பிம்பம் மிகப் பெரிதாக தெரிந்தது. ஜெகனை மக்கள் கொண்டாடினர்.

ஆனால், அதே மக்கள் 5 ஆண்டுகள் கழித்து ஜெகன் கட்சியை தற்போது முற்றிலும் புறக்கணித்துள்ளனர். வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி தகுதியையும் இழந்து நிற்கிறது.

சந்திரபாபு நாயுடுவுக்கு இணையாக ஜெகனுக்கு அரசியல் அனுபவமும் நிர்வாக அனுபவமும் கிடையாது. ஆந்திர அரசின் கடன் சுமையும் மிகவும் அதிகரித்துள்ளது. ஜெகன் தன்னுடைய கர்வத்தினால் வீழ்ந்தார் எனும் விமர்சனமும் அதிகமாக உள்ளது.

மற்றொரு புறம் ஜெகன்மோகன் ரெட்டி, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகாலமும் ஜாமீனில் தான் முதல்வராக பணியாற்றினார். இனி வேகம் எடுக்கும் இந்த வழக்குகளால் வரும் நாட்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஜெகன் தொடர்ந்து நடத்த முடியாது என்றும் சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

ஷர்மிளா வழியில் ஜெகன்? - ஜெகனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரது சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர், ஒய்எஸ்ஆர் தெலங்கானா எனும் கட்சியை நிறுவினார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை இவர் சந்திரசேகர ராவை தீவிரமாக விமர்சித்து வந்தார். பிறகு டெல்லியில், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தனது கட்சியையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.

அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் ஷர்மிளா, தனது சகோதரர் ஜெகனை கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும் இத்தேர்தலில் ஆந்திராவில் ஓர் எம்எல்ஏ அல்லது ஓர் எம்.பி.கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. ஷர்மிளாவும் கடப்பாவில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் ஜெகனும் தனது தங்கை ஒய்எஸ் ஷர்மிளா வழியில் செல்லக்கூடும் என ஆந்திர அரசியலில் பேசப்படுகிறது. தேசிய கட்சியின் நிழலில் இருந்தால், அரசியலில் தாக்கு பிடிக்கலாம் என ஜெகன் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது.

பாஜகவில் சேர வாய்ப்பில்லை: மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியை 3-வது முறையாக கைப்பற்றி உள்ளது. இதில் இம்முறை தெலுங்கு தேசமும் அங்கம் வகிக்கிறது. ஆதலால் ஜெகன்மோகன் ரெட்டியால் பாஜக அணியில் இணைய முடியாது.

இந்நிலையில் தங்களுக்கு எதிரான அரசியல் விமர்சனங்களை ஜெகன் கட்சியினர் மறுத்து வருகின்றனர். 5 ஆண்டுகள் கழித்து நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என பதில் கூறி வருகின்றனர்.

ஏனெனில் 2019-ல் படுதோல்வி அடைந்த தெலுங்கு தேசம் கட்சி இப்போது 2024-ல் ஆட்சியை பிடிக்கவில்லையா? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x