

மும்பை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 23 இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது பல தொகுதிகளை இழந்துள்ளது. இது பாஜகவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த பின்னடைவுக்கு மகாராஷ்டிர பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒரவரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்க உள்ளார். மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பாஜக சார்பில் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கட்சியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு அமைப்புரீதியில் பணியாற்ற விரும்புகிறேன். கட்சி அமைப்பை வலுப்படுத்துவதில் எனது முழு நேரத்தையும் செலவிட விரும்புகிறேன். எனவே மாநில அரசுப் பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கட்சியின் மத்திய தலைமையிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்” என்றார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இதில், நடந்து முடிந்த தேர்தலில் இண்டியா கூட்டணி 30 இடங்களில் வென்றது. கடந்த 2019 தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இம்முறை 13 இடங்களில் வென்றுள்ளது. சிவசேனா (உத்தவ்) 9 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 8 இடங்களிலும் வென்றுள்ளன.
மகாராஷ்டிராவில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 17 இடங்களில் வென்றுள்ள போதிலும் முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது இது குறைவு ஆகும். முந்தைய தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக 23 இடங்களில் வென்றது.