Published : 04 Jun 2024 06:54 AM
Last Updated : 04 Jun 2024 06:54 AM

இன்று வாக்கு எண்ணிக்கை: வெற்றி விழாவுக்காக தயாராகும் பாஜக மேலிடம்

புதுடெல்லி: ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட மக்கள வைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அன்று மாலை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக மேலிடத் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் வெற்றி விழாவை நடத்த பாஜக மேலிடம் தயாராகியுள்ளது. டெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் மிகப்பெரிய வாகனப் பேரணியை பாஜக நடத்தவுள்ளது.

இதேபோல் பாரத் மண்டபம், யஷோபூமி, கர்த்தவ்யா பாத் (கடமைப் பாதை) உள்ளிட்ட இடங்களிலும், வேறு சில நகரங்களிலும் பாஜகவின் வெற்றி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடிபதவியேற்றவுடன் இந்த வெற்றிகொண்டாட்டங்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

பிரதமர் மோடியின் அலுவலக இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் இருந்து மிகப்பெரிய வாகனப் பேரணி நடத்தப்படவுள்ளது. அங்கிருந்து பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் வரையில் இந்த வாகனப் பேரணி நடைபெறும் என்று தெரிகிறது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேபோல் மும்பையில் நடைபெறும் வெற்றி விழாவின்போது 10 ஆயிரம் பேருக்கு லட்டு இனிப்பை பாஜக தலைவர்கள் சார்பில் வழங்க உள்ளனர். பாஜக மேலிடத் தலைவர்கள் அனுமதி வழங்கியதும் பாஜகவின் வெற்றி கொண்டாட்ட விவரங்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x