Last Updated : 30 May, 2024 08:46 PM

1  

Published : 30 May 2024 08:46 PM
Last Updated : 30 May 2024 08:46 PM

இந்திய அரசியல் களத்தில் யூடியூபர் துருவ் ராட்டி அதிகம் பேசப்படுவது ஏன்?

இந்திய அரசியல் களத்தில் இன்ஃப்ளுயன்சர்கள், யூடியூபர்களின் பங்கு தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், சமீப காலமாக கவனம் பெற்று, அதிகம் பேசப்படும் இளம் யூடியூபர்களில் ஒருவர் துருவ் ராட்டி (Dhruv Rathee). உள்ளூர், மாவட்டம், மாநிலம், தேசியம் என பல கட்டங்களில் தங்களை அரசியல் நிபுணர்களாக பறைசாற்றிக் கொண்டு வீடியோக்களைப் பகிர்ந்து கவனம் பெறும் யூடியூப் இன்ஃப்ளூயன்சர்களில் துருவ் ராட்டி ஏன் அதிகம் பேசப்படுகிறார்?!

யார் இந்த துருவ் ராட்டி? - இந்தக் கேள்விக்கு ஒருவேளை அவர் எதிர்க்கட்சி ஆதரவாளரா என்ற எண்ணம்தான் முதலில் உதிக்கும். ஆனால், துருவ் ராட்டி எங்கோ வெளிநாட்டில் இருக்கிறார். அப்படியிருந்தும் இந்திய அரசியல் களத்தில் தனது கருத்துகளுக்கு செவிசாய்க்க ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி துருவ் ராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டார். “Is India becoming a DICTATORSHIP?” என்ற ஒரு வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். 2.4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த அந்த வீடியோ அவர் மீதான ஊடக வெளிச்சத்தை பிரகாசமாக்கியது. அந்த வீடியோவில் துருவ் சண்டிகர் மேயர் தேர்தல், விவசாயிகள் போராட்டம் 2.0 ஆகியன பற்றி பேசியிருந்தார். ஆனால், இந்தியாவில் வசிக்காத துருவ் அந்நிய மண்ணில் இருந்து கொண்டு எதற்காக இந்திய அரசாங்கத்தை சரமாரியாக விமர்சிக்கிறார் என்ற கேள்விகள் எழுந்தன.

அவர். பிப்.22-ல் வெளியிட்ட வீடியோ ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள் ஏப்ரல் 1-ஆம் தேதி “சர்வாதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது?” “DICTATORSHIP confirmed?” என்ற பெயரில் இன்னொரு வீடியோவை வெளியிட்டார். அதில் தேர்தல் பத்திரங்கள், ஜார்க்கண்ட், டெல்லி முதல்வர்கள் கைது, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் எனப் பல பிரச்சினைகள் இருப்பதாகப் பேசியிருந்தார். அந்த வீடியோவை 2.6 கோடி பார்வைகளைக் கடந்தது.

2023-ல் டைம்ஸ் இதழின் அடுத்த தலைமுறை தலைவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றார். மத்திய அரசை இவ்வாறாக விமர்சித்துப் பேசுவதற்கு முன்னரே கூட வரலாறு, சமகால விவகாரங்கள், பாப் கலாச்சாரம் எனப் பல்வேறு தலைப்புகளில் கீழ் அவர் பதிவு செய்த வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவருடைய அரசியல் பகிர்வுகள்தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

என்ன காரணம்?! - துருவ் ராட்டியின் அரசியல் வீடியோக்கள் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களைவிட மிகவும் வீச்சு அதிகம் கொண்டதாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூற, இது பற்றி துருவ் ராட்டி ஒரு பேட்டியில், “அரசாங்கத்தை கேள்வி கேட்கிறேன். அப்படிக் கேள்வி கேட்பது ஒரு தேசமாக நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் தன்னைப் பற்றி நிறையவே விளக்கியுள்ளார். சிறு வயதிலிருந்தே வீடியோக்கள் எடுப்பதன் மீது பற்று இருந்தாலும் கூட 2011-ல் டெல்லியில் நடந்த ஊழல் ஒழிப்புப் போராட்டம்தான் செய்திகள், அரசியல் சார்ந்த தனது பார்வையைக் கட்டமைத்ததாக அவர் கூறி இருக்கிறார்.

மேலும், “இப்போது யூடியூப் மூலம் அரசியல் எக்ஸ்ப்ளெய்னர் வீடியோக்கள் செய்வது என்பது வயது, மதம், சாதி, பாலினம் கடந்து எல்லா மக்களின் ஆதரவையும் பெற எனக்கு இருக்கும் ஒரே சிறந்த வழி என நினைக்கிறேன். அதனாலேயே அதன் மூலம் மக்களைச் சென்றுசேர முயல்கிறேன்” என்று கூறும் துருவ் ராட்டி, தன்னை வெறும் இன்ஃப்ளூயன்சர் என்று யாரும் அடையாளப்படுத்த வேண்டாம் எனக் கோருகிறார். மாறாக, தன்னை ஒரு ‘யூடியூப் எஜுகேட்டர்’ என்றே அழைக்க விரும்புகிறார். தேச நலனுக்காக தான் பேசுபவற்றை தேசப்பற்றுடைய யாராக இருந்தாலும் பகிர்வார்கள் என்றும் கூறுகிறார்.

துருவ் ராட்டியாக இருக்கட்டும், இல்லை வேறு எந்த இன்ஃப்ளூயசராக இருக்கட்டும் அனைவரின் நோக்கமும் தன்னைப் பின் தொடரும் ஒரு கூட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு ஏதும் இருக்க முடியாது. ஒருவேளை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் களத்தில் இறங்கிதான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏதோ ஒரு கட்சியிடம் பலன்களை அனுபவித்துக் கொண்டு இன்னொரு கட்சியை சாடுவது என்பது அரசியலை லாபகரமான தொழிலாக மாற்றிக் கொள்ளும் முயற்சி. காற்றுள்ளபோது தூற்றிக் கொள்ளுதல் பழமொழி போன்ற ஆதாயம் தேடும் செயல்.

இன்றைய காலகட்டத்தில் சில ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளுக்காக அடிக்கும் லூட்டிகளும் இத்தகைய டிஜிட்டல் கிரியேட்டர்கள் புற்றீசல் போல் பெருகக் காரணம். டிவி சேனலைவிட சற்றே தூக்குதலாக ஒரு விஷயத்தை இந்த கிரியேட்டர்கள் சொல்ல ஆரம்பிக்கும்போது மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களுக்கான பார்வையாளர்கள் இப்படி தவறாக மடைமாற்றி விடப்படுகின்றனர். இது அபாயகரமான போக்கு எனக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

புள்ளி விவரங்கள் சொல்வதென்ன? - இந்தியர்கள் மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களை நம்புவதைவிட யூடியூப், வாட்ஸ் அப் சேனல்களில் வருபவற்றை அதிகம் நம்பும் போக்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. அந்த வகையில் துருவ் ராட்டியின் பிரபல்யத்துக்கான காரணமும் நிறுவப்படுகிறது.

ஒருபுறம் கருத்துக் கணிப்புகள் பிரதமர் மோடியின் பிம்பம் உயர்ந்தே இருக்கிறது என்று கூறும் சூழலில் துருவ் ராட்டி போன்ற யூடியூபர்கள் தங்கள் கருத்துகள் மூலம் பெருங்கூட்டத்துக்கு வேறு ஒரு விஷயத்தை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் தான் எதிர்க்கட்சிகளைவிட இந்தியாவின் உண்மையான பிரச்சினைகள் இவரைப் போன்றோர் ஆழமாக எடுத்துரைப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், தன்னைப் போன்ற டிஜிட்டல் கிரியேட்டர்களால் ஒரு மெயின்ஸ்ட்ரீம் ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களைப் போல் சரியான தரவுகளோடு புலனாய்வு இதழியலாளர் போல் செயல்பட முடியாது என துருவ் ராட்டி ஒப்புக் கொள்ளத் தவறவில்லை. துருவ் ராட்டிக்கு 2 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 50 லட்சம் யூடியூப் சப்ஸ்க்ரைபர்களே உள்ளனர். ராகுல் காந்திக்கு 60 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இவர்களைவிட மிக மிக அதிகமாக ஃபாலோயர்கள் வைத்துள்ள துருவ் ராட்டி இயல்பாகவே அதிகம் பேசப்படும் நபராகிவிடுகிறார் அல்லவா?.

ஆனால், துருவ் ராட்டிக்கு 2 கோடி ஃபாலோயர்கள் என்றால் மோடிக்கு 2.3 கோடி ஃபாலோயர்கள். சற்றே விஞ்சி நிற்கிறார் மோடி. ஆரம்பத்தில் அந்த 2.3 கோடி ஃபாலோயர்களில் துருவ் ராட்டியும் ஒருவராகத்தான் இருந்துள்ளார். 2014 தேர்தலின் போது கூட பாஜகவின் கறுப்புப் பண ஒழிப்பு கோஷங்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் பின்னாளில் மோடியை விமர்சித்துப் பேசிய துருவ், “ஊழல் ஒழிப்பில் பிரதமருக்கு உண்மையான அக்கறையில்லை என்று நான் உணர்ந்த தருணத்தில் மிகவும் வியப்படைந்தேன்” என்று கூறியுள்ளார்.

2016 செப்டம்பர் 16-ல் தான் மத்தியில் நடக்கும் பாஜக ஆட்சியை விமர்சித்து முதல் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். 8 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட அரசியல் வீடியோக்கள் பதிவேற்றியுள்ளார். ஆரம்பத்தில் எல்லாவற்றையும் தனியாக செய்த துருவ் ராட்டி தற்போது தன்னிடம் ஒரு குழு இருப்பதாகக் கூறுகிறார். தரவுகளை சரிபார்த்தல், ஸ்க்ரிப்ட் எழுதுதல், வீடியோ எடிட் செய்தல் என எல்லாவற்றிற்கும் தனித்தனி ஆட்கள் வைத்திருப்பதாகக் கூறுகிறார். யூடியூப் வருமானம் ஒருபுறம் இருக்க, துருவ் ராட்டிக்கு அரசியல் நிதி உதவி பின்னணியில் இருக்கும் என்ற வாதங்களும் எழாமல் இல்லை. அப்படியான வாதங்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிடவும் முடியாது என்பது அவ்வப்போது நிகழும் கைதுகளும், எக்ஸ்போஸ் வீடியோக்களும் நிரூபித்து விடுகின்றன.

இந்தியத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைய கடுமையான வெப்ப காலத்தில் தேர்தல் நடத்துவதே என வெளிநாட்டு ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டன, இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்று வெளிநாட்டில் இருக்கும் இன்ஃப்ளூயன்சர் அல்லது எஜுகேட்டர் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

என்ன நினைக்கிறார்கள் இளம் வாக்காளர்கள்? - இப்படியான நிலவரத்தில் வாக்களிக்க வாய்ப்பிருந்தும் அதை செலுத்தாத முதல் முறை வாக்காளர் ஒருவர் கூறும்போது, “இந்திய தேர்தல் நிகழ்வுகளைப் பார்க்கும்போது மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்தியத் தேர்தல் பற்றி உலகெங்கும் இருந்து வரும் ஊடகச் செய்திகள் பிரமிக்க வைக்கிறது. ஆனால், நான் ஏன் ஒருவருக்கு ஓட்டு போடக் கூடாது அல்லது ஏன் இந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவான புரிதலை இந்தியக் கட்சிகள் எனக்கு ஏற்படுத்தவில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

இந்தப் பிரச்சாரங்கள் எல்லாம் என் பேனாவை அவன் எடுத்துட்டான், என் பேப்பரை அவள் கிழித்துவிட்டாள் என்ற பள்ளிக்கூட குற்றச்சாட்டுகள் போலவே எனக்கு இருக்கின்றன. நான் மட்டுமல்ல என் தோழிகள் நிறைய பேரும் இதே எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டோம். அதில் ஒரு சிலர் மட்டும் யார் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போடுவோம் எனத் தீர்மானித்தனர். நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாவது எங்களை சமரசப்படுத்தும் பிரச்சாரம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

யாருக்கு வாக்களிப்பது என்பதில் இளம் வாக்காளர்கள் சமூக ஊடக பிரபல்யத்தையும் ஒரு காரணியாகக் கொண்டு தீர்மானிப்பார்கள் என்றால் ஒரு சமூகவலைதள பிரபலம் பேசுபவை, போதிப்பபவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ‘இந்திய அரசியல் களத்தில் யூடியூபர் துருவர் ராட்டி அதிகம் பேசப்படுவது ஏன்?’ என்பதற்கான பதில்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x