நகரியில் 3-வது முறையாக ரோஜா வெற்றி பெறுவாரா? - லட்சக்கணக்கில் பந்தயம்

நகரியில் 3-வது முறையாக ரோஜா வெற்றி பெறுவாரா? - லட்சக்கணக்கில் பந்தயம்
Updated on
1 min read

திருப்பதி: ஆந்திர அரசியலில் ‘ஃபயர்பிராண்ட்’ என்று அழைக்கப்படு பவர் நடிகையும் அமைச்சருமான ரோஜா. அரசியலில் காலூன்ற கணவர் ஆர்.கே செல்வமணியின் ஒத்துழைப்பே முழு காரணம் என அடிக்கடி ரோஜா சொல்வதுண்டு.

தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ரோஜா, பின்னர் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் அவர், தமிழக எல்லையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியில் 2014-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வரானார்.

இதனை தொடர்ந்து 2019-ல் 2-வது முறையாக வெற்றியை ருசித்தார். அப்போது ஜெகன் முதல்வரானார். 2021-ல் விளையாட்டு, சுற்றுலா துறை, இளைஞர் நலன் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளுக்கு அமைச்சரானார்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரோஜா மீது அவரது நகரி தொகுதி மக்கள் அவநம்பிக்கை அடைந்துள்ளதாக கூறுகின்றனர். நகரி மக்களுக்கு என அவர் எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு நெசவுத்தொழில் செய்பவர்கள் அதிகம். அவர்களுக்கு அரசு சார்பில் எவ்வித மானியமும் பெற்றுத்தரவில்லை என்றும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ரோஜா எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இங்கு முதலியார் இனத்தவர்கள் அதிகம். அதிலும் நகரி தொகுதியில் தமிழர்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சுமார் 65 சதவீதம் பேர் தமிழர்களே. இதனால், முதலியாராகிய இவரது கணவர் ஆர்.கே செல்வமணியை பிரச்சாரம் செய்ய வைத்தால் அது ஓட்டுகளாக மாறி விடுமா? எனும் கேள்வியையும் முன் வைக்கின்றனர்.

இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டவர் பானுபிரகாஷ். என்.டி. ஆருக்கு இவரது தந்தை மிக நெருக்கம். முன்னாள் கல்வி துறை அமைச்சர் காளிமுத்து கிருஷ்ணம்ம நாயுடுவின் மகன் தான் இவர். ரோஜாவிடம் இரு முறை தோற்ற இவர் இம்முறை கண்டிப்பாக வெற்றி பெறுவார் என நகரி தொகுதியில் ஜெகன் கட்சியினரே கூறுகின்றனர்.

ரோஜா மீதும், ஜெகன் கட்சியின் மீதுள்ள அதிருப்தியாலும் இம்முறை ரோஜாவிற்கு பின்னடைவே ஏற்படும் என பலர் கூறுகின்றனர். இந்நிலையில் நகரியின் எல்லையான பள்ளிப்பட்டு, திருத்தணி உட்பட நகரி, புத்தூர், திருப்பதி, காளஹஸ்தி என பல ஊர்களில் ரோஜாவின் வெற்றி குறித்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம், கோடி என பலர் பந்தயங்கள் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அப்போது சிறிய தொகுதியான நகரியின் முடிவுகள் தான் முதலில் வரும் என்று கூறப்படுகிறது. ஆதலால், ரோஜாவின் வெற்றி முதலிலேயே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in