“அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்பை ஊக்குவிக்கிறது பாஜக” - வீடியோ பதிவில் சோனியா காந்தி சாடல்

சோனியா காந்தி
சோனியா காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: “அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க காங்கிரஸுக்கு வாக்களியுங்கள், ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்” எனக் கூறி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதோடு பெண்களும் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள்; பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் மிகுந்த பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். இந்தச் சூழ்நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் நோக்கமே காரணம். எந்த விலை கொடுத்தாவது, அதிகாரத்தைப் பெறுவதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கிறது.

அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்பை ஊக்குவித்து வருகிறது பாஜக. காங்கிரஸ் கட்சியும் நானும் எப்போதும் அனைவரின் முன்னேற்றத்துக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், நாட்டை வலுப்படுத்துவதற்காகவும் போராடி வருகிறோம். நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதை காணும்போது வேதனையாக இருக்கிறது.

இன்று மீண்டும் ஒருமுறை உங்கள் ஆதரவைக் கோருகிறேன். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க காங்கிரஸுக்கு வாக்களியுங்கள், ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம். அரசியலமைப்பைக் காப்பாற்ற இண்டியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் தயாராக இருக்கின்றனர்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in