Published : 07 May 2024 05:29 PM
Last Updated : 07 May 2024 05:29 PM

‘மக்களுக்கு நம்பிக்கை போய்விடாதா?’ - மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேற்கு அரசு சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கில், மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று (மே.7) விசாரித்தது. அப்போது நீதிபதிபதிகள் அமர்வு, “மேற்கு வங்க அரசு எதற்காக இத்தனை அதிகமான எண்ணிக்கையில் பணியிடங்களை உருவாக்கி, வெயிட்டிங்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை பணியமர்த்தியது. தேர்வு முறையையே எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது இது தேவையா?” என வினவியது.

மேற்கு வங்க பள்ளி சேவைகள் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, “கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மேற்கு வங்க ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்ய அதிகாரம் இல்லை. இது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானது” என்று வாதிட்டார்.

அப்போது உச்ச நீதிமன்றம், “தேர்வர்கள் எழுதிய ஓஎம்ஆர் விடைத்தாள்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?” என வினவியது. அதற்கு மேற்கு வங்க அரசுத் தரப்பில் 'இல்லை' என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் “விடைத்தாள்களை திருத்தி. மதிப்பெண்களை ஆவணப்படுத்தும் பணி அவுட்சோர்சிங் மூலம் மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, “அப்படியென்றால் ஆசிரியர் பணி நியமனங்கள் தொடர்பான ஆர்டிஐ மனுக்களுக்கு விடைத்தாள்கள் இருப்பதாகக் கூறியது பொய்யா?” என்று வினவினார். அதற்கு மேற்கு வங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர், “தவறுதலாக சொல்லி இருக்கலாம். உயர் நீதிமன்ற உத்தரவு கூட முறையானது அல்லவே” என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, “இது திட்டமிட்ட ஏமாற்றுவேலை போல் உள்ளது. அரசுப் பணிகள் இன்றைய காலத்தில் குறைந்துவிட்டன. அரசு வேலை என்பது ஒரு நபர் தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளும் அடையாளமாக இருக்கிறது. நியாயமான பணி நியமனங்களிலும் ஊழல் என்றால் என்னாவது? மக்களுக்கு நம்பிக்கை போய்விடாதா? இதை எப்படி நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள்?” என்றார்.

அப்போது குறுக்கிட்ட பள்ளி சேவைகள் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “தலைவலி என்றால் நாம் தலையையே வெட்டி வீசிவிடுவதில்லை. ஆகையால் பணி நியமனங்களில் ஏற்பட்ட சறுக்கல்களை மட்டுமே சரி செய்தால் போதும்” என்றார்.

அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “இருக்கும் ஆவணங்களைக் கொண்டு தகுதியான நியமனங்கள், முறையற்ற நியமனங்கள் என அடையாளம் காண முடியுமா? அப்படியென்றால் அது பற்றி பரிசீலிக்கலாம்” எனக் கூறிச் சென்றார். இன்றைய வழக்கு விசாரணையின் போது இவ்வாறாக மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்தது.

வழக்கு பின்னணி: மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர் பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 25 ஆயிரத்து 753 பேருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணையை மாநில அரசு வழங்கியது.

இந்த ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், பலர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஊழலில் தொடர்புடையதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத் துறையால் கடந்த 2022-ல் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குக்கான தீர்ப்பு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி வழங்கப்பட்டது. ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், 25 ஆயிரத்து 753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x