இந்திய தூதருக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான்: மத்திய அரசு கடும் கண்டனம்

இந்திய தூதருக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான்: மத்திய அரசு கடும் கண்டனம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்களை சந்திக்க தூதருக்கு அனுமதி மறுத்த அந்நாட்டு அரசுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் நிலவி வந்தாலும், சர்வதேச விதிகளையும், இருநாடுகளிடையேயான ஒப்பந்தங்களையும் நிறைவேற்றி வருகின்றன. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ஆன்மீக காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பும், தூதரக உதவியும் வழங்குவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ஆயிரத்து 800 சீக்கியர்கள், பாகிஸ்தானில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்த சென்றுள்ளனர். அங்கு தங்கியுள்ள இந்தியர்களை சந்தித்து பேசவும், அவர்களுக்கு தேவையான உதவி வழங்கவும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்கு சென்றனர்.

ஆனால், பாதுகாப்பு காரணங்கள் எனக்கூறி, இந்தியர்களை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த சம்பவம் நேற்று அங்கு நடந்துள்ளது. அதுபோலவே, ஏப்ரல் 12ம் தேதி வாகா ரயில் நிலையத்திலும் அவர்களை சந்திக்க இந்திய தூதருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாகிஸ்தானில் இந்த செயலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘இருநாடுகளிடையே ஆன்மீகம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பாதுகாப்பும், உதவியும் வழங்கப்பட வேண்டும். ஆனால், பாகிஸ்தான் விதியை மீறி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இது, தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இது குறித்து பாகிஸ்தானிடம் வெளியுறவு அமைச்சகத்திடம் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in