“காங். தலைவர்கள் தங்களை ராமரை விட மேலானவர்களாக கருதுகின்றனர்” - பிரதமர் மோடி @ சத்தீஸ்கர்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
2 min read

சத்தீஸ்கர்: “ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்த காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமரை விடவும் மேலானவர்களாக கருதுகிறார்கள். ஏழைகள், பெண்கள், விவசாயிகள் நலனே எங்கள் முன்னுரிமை” என்று பிரதமர் மோடி பேசினார்.

சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர் - சம்பாவில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியது: “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமருக்கு மேலாகக் கருதுகின்றனர். காங்கிரஸ்காரர்கள் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டைக்கான அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்துகின்றன.

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவது காங்கிரஸின் டிஎன்ஏவில் உள்ளது. தேர்தல் நெருங்கும்போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு, அரசமைப்பை மாற்றிவிடும் என காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது. எவ்வளவு காலம்தான் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்? பாபா சாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள் நலனே எங்கள் முன்னுரிமை.

ஒரு பழங்குடிப் பெண் நம் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனபோது, காங்கிரஸ் அவரை அவமதித்தது. நாட்டின் பெரும் பகுதி மக்கள் காங்கிரஸை நிராகரித்தனர். நாளை அக்கட்சி டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பையே நிராகரிக்கும். மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த 10 ஆண்டுகளில், நாடு முன்னேறியுள்ளது. ஆனால் இன்னும் நிறைய பணிகள் மீதமுள்ளன” என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, ராஜஸ்தானின் டோங்க் நகரில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினேன். காங்கிரஸ் உங்கள் சொத்துகளை எக்ஸ்ரே செய்யும் என அதன் தலைவர் கூறுகிறார். உங்களின் சொத்துகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளை கணக்கெடுப்பதாகவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால்கூட, அவர்கள் எக்ஸ்ரே செய்து ஒரு வீட்டைப் பறிப்பார்கள்.

இப்படி, மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்துள்ளது. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்திய போது, ​​அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏன் உண்மையை கண்டு பயப்படுகிறார்கள். காங்கிரஸ் ஏன் தனது கொள்கைகளை மறைக்க விரும்புகிறது?

நீங்கள் மறைத்ததை நான் அம்பலப்படுத்தியதும், நீங்கள் பயத்தில் நடுங்குகிறீர்கள். மேலும் இதனை வெளிப்படுத்தியதும் காங்கிரஸுக்கு என் மீது அதிக வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், என்னை வசைபாடத் செய்யத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் முழுமையாக மூழ்கியுள்ளது” என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in