Published : 23 Apr 2024 03:13 PM
Last Updated : 23 Apr 2024 03:13 PM

“21 கோடீஸ்வரர்களின் சொத்துகள் பற்றி பேசாதது ஏன்?” - மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: “அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை. இண்டியா கூட்டணி அரசால் மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும்” என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துகள், வீடுகள் அபகரிக்கப்படும் என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2012 முதல் 2021 வரை நாட்டில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை வெறும் 1 சதவீத மக்களிடம் மட்டுமே சென்றுள்ளது. நாட்டில் வசூலாகும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சுமார் 64 சதவீதம் ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்க மக்களே செலுத்துகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பெரும்பாலான பொதுச் சொத்துகள் மற்றும் வளங்கள் அனைத்து ஒன்றிரெண்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுள்ளது. இந்த வளர்ந்து வரும் எதேச்சதிகாரம் பணவீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று 21 கோடீஸ்வரர்கள் இணைந்து 70 கோடி இந்தியர்களைவிட அதிகமான சொத்துகளை வைத்துள்ளனர். இவை குறித்து பிரதமர் மோடி ஒருபோதும் மக்களிடம் சொல்லப்போவதில்லை.

இந்தியாவுக்கு வேகமான பொருளாதார வளர்ச்சித் தேவை. இந்தியாவுக்கு பரந்த அளவிலான அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே தேவை. இந்தியாவுக்கு பெரிய அளவிலான சூழல் சார்ந்த நீடித்த பொருளாதார வளர்ச்சி தேவை. இதனை இண்டியா கூட்டணி அரசு மட்டுமே தர முடியும்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மோடி பேசியது என்ன? - உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யார் எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனர்? யாருக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கிறது? யாரிடம் எவ்வளவு ரொக்க பணம் இருக்கிறது? எத்தனை வீடுகள் இருக்கின்றன என்பன குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்த கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தி) கூறியிருக்கிறார். அரசே சொத்துகளை கையகப்படுத்தி அனைவருக்கும் பிரித்து வழங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெண்களின் தாலிச் செயின்கள் மீதும் கண்வைப்பார்கள். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதன்மூலம் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பங்கள் சொத்துகளை குவித்தன. தற்போது நாட்டு மக்களின் சொத்துகள் மீதும் காங்கிரஸ் கண் வைத்திருக்கிறது. அந்தக் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துகள், வீடுகள் அபகரிக்கப்படும். கொள்ளையடிப்பதை தங்களின் பிறப்பு உரிமையாக அந்த கட்சி கருதுகிறது” என்றார்.

மீண்டும் பேசிய மோடி - அலிகருக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்துள்ளன. இந்த நிலையில், மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி மீண்டும் ராஜஸ்தானில் இன்று பேசியுள்ளார்.

“நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினேன். காங்கிரஸ் உங்கள் சொத்தை எக்ஸ்ரே செய்யும் என அதன் தலைவர் கூறுகிறார். உங்களின் சொத்துகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளை கணக்கெடுப்பதாகவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால்கூட, அவர்கள் எக்ஸ்ரே செய்து ஒரு வீட்டைப் பறிப்பார்கள்.

இப்படி, மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்துள்ளது. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்திய போது, ​​அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏன் உண்மையை கண்டு பயப்படுகிறார்கள். காங்கிரஸ் ஏன் தனது கொள்கைகளை மறைக்க விரும்புகிறது?

நீங்கள் மறைத்ததை நான் அம்பலப்படுத்தியதும், நீங்கள் பயத்தில் நடுங்குகிறீர்கள். மேலும், இதனை வெளிப்படுத்தியதும் காங்கிரஸுக்கு என் மீது அதிக வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், என்னை வசைபாடத் செய்யத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் முழுமையாக மூழ்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை அளிப்பேன் எனக் கூறியது உண்மை. அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். அதுமட்டுமல்ல, 2004-ல் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் முதல் வேலையாக, எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் திட்டத்தை மேற்கொண்டது. நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அது முடியவில்லை” என்று மோடி பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x