டெல்லி மதுபான கொள்கை வழக்கு | மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

மணீஷ் சிசோடியா | கோப்புப்படம்
மணீஷ் சிசோடியா | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள் மீதான ஜாமீன் மனுக்கள் மீது தனது தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் விசாரணை அமைப்புகளின் வாதங்களைக் கேட்ட பின்னர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பினை ஏப்.30-க்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார். சிசோடியா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இன்று கூறும் போது, வழக்கமான ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இடைக்கால ஜாமீன் மனு பயனற்றதாகி விட்டது என்று தெரிவித்தார்.

டெல்லியில் மதுபான கொள்கையை மாற்றி அமைக்கும் போது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. உரிமை வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன, உரிமைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது, தகுந்த அதிகாரிகளின் அனுமதியின்றி உரிமம் நீட்டிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனால் பயன்பெற்றவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு சட்டவிரோதமாக சில ஆதாயங்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அவற்றைக் கண்டுபிடிக்க முடியாத படி பிழையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ, மணீஷ் சிசோடியாவை 2023, பிப்.26ம் தேதி கைது செய்தது. சிபிஐ வழக்கின் அடிப்படையில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இதே வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரை 2023, மார்ச் 9ம் தேதி கைது செய்தது. இந்தநிலையில் 2023, பிப்28-ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in