

புதுடெல்லி: மதுபான ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் மதுபான வியாபாரி சரத் ரெட்டி பணம் கொடுக்கவில்லை என்றால் அவரது தொழில் பாதிக்கப்படும் என்று பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா மிரட்டியதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் கட்சி மேலவை உறுப்பினர் கே.கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் மாதத்தில் கைது செய்தது. இதனிடையே, டெல்லி திஹார் சிறையில் இருக்கும் கவிதாவை இதே வழக்குக்காக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை கைது செய்தது. அவரை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. கவிதாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அப்போது, டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கவிதாவை முக்கிய சதிகாரர் எனக் கூறும் அடிப்படையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாகத் தெரிவித்தது.
சிபிஐ மேலும் கூறுகையில், “தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளர் விஜய் நாயரிடம் கவிதா பணம் கொடுத்துள்ளார். சவுத் க்ரூப்பின் தொழிலதிபர் ஒருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்துள்ளார். அவர், அந்த நபருக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளார். பின்னர் அந்தத் தொழிலதிபர் கவிதாவைச் சந்தித்தார்.
தனக்கு டெல்லியில் பலரைத் தெரியும் என்று கவிதா மதுபான வியாபாரி சரத் ரெட்டிக்கு உறுதி அளித்தப் பின்னர் அவர் டெல்லி மதுபான வியாபாரத்தில் பங்கேற்றார். அவரிடம் மொத்த விற்பனைக்காக ரூ.25 கோடியும், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ரூ.5 கோடி ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்று கவிதா தெரிவி்த்துள்ளார். அதற்கு சரத் ரெட்டி தயங்கிய போது அவரது வியாபாரம் சிக்கலைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்று கவிதா மிரட்டியதாக மதுபான வியாபாரி எங்களிடம் தெரிவித்தார்.
மதுபான கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையின் போது வெளியான தகவல்கள் தொடர்பாக கவிதாவிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. திஹார் சிறையில் சனிக்கிழமை அவரிடம் விசாரணை நடத்திய போது ஆதாராங்களைக் காட்டியபோதும் அவர் தனக்கு தெரிந்தத் தகவல்களைத் தெரிவிக்கவில்லை. திருப்திகரமான பதில்களை அளிக்கவில்லை.”என்று குற்றம் சாட்டியது. கவிதா தற்போது அமலாக்கத் துறை காவலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கவிதாவை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதமானது இது அவரது அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்று கவிதா தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். கவிதா நீதிமன்றத்தில் கூறும்போது, “சிறை அதிகாரிகள் இந்த கைது குறித்து எனக்கு தெரிவித்தனர். என்னை தொலைப்பேசியில் பேச அனுமதித்தனர், நான் எனது கணவருக்கு தகவல் தெரிவித்தேன்.ஆனால் எனது வழக்கறிஞர்களிடம் பேச அனுமதிக்கவில்லை” என்றார்.