ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க எஸ்பிஐ மறுப்பு

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க எஸ்பிஐ மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் வெளியிட பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மறுத்துவிட்டது.

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கமடோர் லோகேஷ் பாத்ரா. ஆர்டிஐ ஆர்வலரான இவர், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு தரவுகளையும் வழங்கக் கோரி மார்ச் 13-ல் எஸ்பிஐயிடம் விண்ணப்பித்தார்.

ஆனால், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட இரண்டு விதிவிலக்கு ஷரத்துகளை மேற்கோள் காட்டி லோகேஷ் பாத்ரா கேட்ட தகவல்களை தர எஸ்பிஐ மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக மத்திய பொதுத் தகவல் அதிகாரியும், எஸ்பிஐயின் துணைப் பொது மேலாளரும் அளித்துள்ள பதிலில்.“நீங்கள் கோரும் தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விவரங்கள் இடம்பெற்று உள்ளன. ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட இரண்டு விதிவிலக்கு ஷரத்துக்களான 8(1)(இ) நம்பிக்கை பதிவு மற்றும் 8(1) (ஜே) தனிப்பட்ட தகவல்களை நிறுத்தி வைத்தல் ஆகியவற்றின் கீழ் வெளியிட முடியாது" என்று தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வெளியிடுவதற்கு எதிரான வழக்கை வாதிட மூத்தவழக்கறிஞர் ஹரிஷ் சால்வேக்கு வழங்கிய தொகை குறித்த விவரங்களையும் பாத்ரா கோரியிருந்தார். அதனையும் தர எஸ்பிஐ மறுத்துவிட்டது.

இதுகுறித்து பாத்ரா கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் ஏற்கெனவே உள்ள தகவலை கொடுக்க எஸ்பிஐ மறுத்திருப்பது வினோதமான செயல்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in