திஹார் சிறையில் கவிதாவிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி

கே.கவிதா | கோப்புப்படம்
கே.கவிதா | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் கட்ட விசாரணையை மத்திய புலனாய்வு முகமை தொடங்கியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக கவிதாவை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடந்தபோது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதற்கு முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மற்றும் சம்மன்களுக்கு கவிதா பதில் அளிக்கவில்லை. விசாரணையின் போது கிடைத்த தகவல் குறித்து அவரிடம் கூடுதல் விபரங்கள் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார். சிபிஐ மனுவுக்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குகளை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி அளித்தார்.

முன்னதாக, தனது 16 வயது மகனுக்கு தேர்வுகள் நடக்கிறது. அதற்காக அவருக்கு தாயின் ஆதரவும் ஊக்கமும் தேவைப்படுகிறது. எனவே தனது இடைக்கால ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி வியாழக்கிழமை கவிதா நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

முன்னாள் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியுமான கவிதா, சவுத் க்ரூப்-ன் முக்கிய உறுப்பினர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிறுவனம் டெல்லியில் மதுபான உரிமைக்கு ஈடாக ரூ,.100 கோடியை அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பான பணமோசடி வழக்கில் கவிதாவை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை மார்ச் 15 தேதி கைது செய்தது. அதைத் தொடர்ந்து 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in