பாஜகவில் இணைந்தார் நடிகை சுமலதா

பாஜகவில் இணைந்தார் நடிகை சுமலதா
Updated on
1 min read

பெங்களூரு: கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா பாஜகவில் இணைந்தார்.

கன்னட நடிகர் அம்பரீஷ் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். சீட் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சுமலதா, இந்த தேர்தலில் பாஜகவிடம் சீட் கேட்டார்.

பாஜக மேலிடம் மண்டியா தொகுதியை கூட்டணியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். இதனால் அதிருப்தி அடைந்த சுமலதாவை கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திராவும், குமாரசாமியும் சந்தித்து ஆதரவு கோரினர்.

இதன்பின் தேர்தலில் போட்டியிடுவதால் இருந்து விலகுவதாக அறிவித்த சுமலதா, "நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸில் எனக்கு மரியாதை இல்லை. எனவே விரைவில் பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கிறேன். பாஜக எனக்கு மைசூரு, சிக்கப்பள்ளாப்பூர், பெங்களூரு வடக்கு ஆகிய தொகுதிகளை அளிக்க முன்வந்தது. ஆனால் என் கணவரின் சொந்த தொகுதியான மண்டியாவை விட்டு செல்ல மனமில்லை" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, இன்று பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் பிஎஸ் எடியூரப்பா, மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால், முன்னாள் முதல்வர் டி.வி.சதானந்த கவுடா ஆகியோர் முன்னிலையில் நடிகை சுமலதாபாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.

பாஜகவில் இணைந்தபின் பேசிய சுமலதா, "மண்டியா மாவட்டத்தின் விரிவான வளர்ச்சியே எனது அடிப்படை மந்திரம். மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையில் பாஜகவில் இன்று இணைந்துள்ளேன்" கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in