சுமலதா vs நிகில்: மண்டியா யாருக்கு கிடைக்கும்?

சுமலதா vs நிகில்: மண்டியா யாருக்கு கிடைக்கும்?
Updated on
1 min read

கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான‌ சுமலதா சுயேச்சையாக‌ போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சித்த நிலையில், அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்க சுமலதா திட்டமிட்டுள்ளார்.

இதற்காக கடந்த வாரம் டெல்லி சென்ற அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களான கன்னட நடிகர்கள் தர்ஷன், யஷ், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோரிடமும் ஆலோசித்தார்.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள ம‌தசார்பற்ற ஜனதா தளம் கட்சி, மண்டியா தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த தொகுதியில் குமாரசாமி தன் மகனும் நடிகருமான‌ நிகில் கவுடாவை மீண்டும் களமிறக்க முடிவெடுத்துள்ளார். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த நிகில் கவுடா இந்த முறை வெற்றி அடைந்தே தீர வேண்டும் என அங்கு ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மஜத நிர்வாகிகள் கூறுகையில், ''மண்டியா மாவட்டத்தில் மஜதவுக்கு 5.5 லட்சம் வாக்குகள் உள்ளது. இந்த தொகுதியை தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் கடுமையாக உழைத்து முன்னேற்றியுள்ளனர். மண்டியா மஜதவின் கோட்டையாக விளங்குகிறது.

கடந்த முறை சுமலதா அனுதாப வாக்குகளின் காரணமாக வெற்றி அடைந்தார். இந்த முறை நிச்சயம் மஜத வெற்றி அடையும். எனவே இந்த தொகுதியை மஜதவுக்கு ஒதுக்குமாறு பாஜக மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது''என்றனர். மண்டியா தொகுதிக்கு சுமலதா, நிகில் கவுடா இடையே கடும் போட்டி நிலவுவதால், அதனை யாருக்கு ஒதுக்குவது என பாஜக மேலிடம் குழப்பம் அடைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in