Published : 01 Apr 2024 09:55 AM
Last Updated : 01 Apr 2024 09:55 AM
புதுடெல்லி: “தேர்தல் பத்திர சர்ச்சையால் பாஜகவுக்கு எவ்வித பின்னடைவும் இல்லை. இன்று தேர்தல் பத்திரத்தின் மீதான தடையைக் கொண்டாடுவோர், பின்னாளில் இதற்காக வருந்தப் போகிறார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் தேர்தல் பத்திரம் முதல் அதிமுக - பாஜக கூட்டணி அமையாதது வரை பல்வேறு விஷயங்கள் பற்றியும் பிரதமர் மோடி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் சில வருமாறு: தேர்தல் பத்திர சர்ச்சையால் பாஜகவுக்கு எவ்வித பின்னடைவும் இல்லை. இன்று தேர்தல் பத்திரத்தின் மீதான தடையைக் கொண்டாடுவோர், பின்னாளில் இதற்காக வருந்தப் போகிறார்கள். எந்த ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் போதும் அதில் சில குறைகள் வரத்தான் செய்யும். ஆனால் அது காலப்போக்கில் சரி செய்யக் கூடியதே. தேர்தல் பத்திரங்கள் இருப்பதால் தான் இன்று எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி சென்றது என்ற நிலவரத்தைக்கூட தெரிந்து கொள்ள முடிந்தது. 2014க்கு முன்னர் எந்தெந்த அரசியல் கட்சி எவ்வளவு நிதி பெற்றன என்பதைப் பற்றி எந்த ஒரு அமைப்பாவது சொல்ல இயலுமா? இதில் நாங்கள் என்ன தவறு செய்திருக்கிறோம் என சுட்டிக்காட்டினால் அதனால் என்ன பின்னடைவு எங்களுக்கு ஏற்பட்டது என்பதையும் சொல்லலாம்.
எல்லாவற்றிலும் அரசியல் தேடாதீர்கள்.. நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஏன் அரசியலைத் தேடுகிறார்கள். நான் இந்த தேசத்துக்காக வேலை செய்கிறேன். என் நாட்டின் மிகப்பெரிய சக்தி தமிழகம். அங்குள்ள மக்கள் மீதான அதீத அன்பு தான் என்னை அடிக்கடி தமிழகத்துக்கு இழுத்துச் செல்கிறது. அவர்கள் ஆட்சியை யாருக்கு கொடுக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. நான் தேர்தல் சிந்தனையில் தமிழகத்தை பார்ப்பதில்லை.
அடுத்த ஆட்சியில் சுயசார்பு இந்தியாவுக்காக மிகப்பெரிய பாதுகாப்பு முனையம் தமிழகத்தில் அமையும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் உத்தரவாதம் அளிக்க முடியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு நல்ல நண்பராக இருந்தார்.
தமிழ்நாடு இத்தேசத்தின் மிகப்பெரிய வலிமை. வாக்குகள் மட்டுமே எனது இலக்காக இருந்திருந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு நான் இத்தனை நன்மைகள் செய்திருக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?. பாஜக அமைச்சர்கள் 150க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். மற்ற பிரதமர்களைக் காட்டிலும் நான் அதிக முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் அரசியல்வாதி என்பதால் தேர்தலில் வெற்றி பெற மட்டுமே வேலை செய்கிறேன் எனக் கருதக் கூடாது. தமிழ்நாட்டிடம் மிகப் பெரிய சக்தி இருக்கிறது. அது வீணாகிவிடக்கூடாது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் ஒன்றிணைத்து மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது. ஆகையால் தமிழகத்தில் பாஜகவுக்கு விழும் ஓட்டு திமுக எதிர்ப்பு வாக்குகள் அல்ல மாறாக அது பாஜக ஆதரவு வாக்காகவே இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். தமிழகம் இம்முறை பாஜக - என்டிஏவுக்கே வெற்றியை வழங்குவது எனத் தீர்மானித்துவிட்டது, பாஜக தமிழகத்துக்காக வேலை செய்கிறது. இன்று மட்டுமல்ல ஒரே ஒரு முனிசிபல் கவுன்சிலர் கூட இல்லாத காலத்திலும் பாஜக தமிழகத்துகாக வேலை செய்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் ராமர் முன் நின்ற போது என் பார்வை முதலில் அவரது பாதத்தின் மீது இருந்தது. அதன் பின் பார்வை நகரவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையிலேயே கோயில் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே ராமர் பெயரில் உள்ள ஊர்கள் அதிகம் இருப்பது தமிழகத்தில் தான். ராமர் கோயிலால் தாக்கம் இருக்காது என சொல்பவர்களுக்கு, ராமர் என்ன, தமிழகத்தை பற்றி கூட தெரியாது.
அதிமுகதான் வருந்த வேண்டும்: கூட்டணியில் அதிமுக இல்லையே என வருத்தப்படுவதற்கு பாஜகவுக்கு எந்த காரணமும் இல்லை. கூட்டணி குறித்த வருத்தம் யாருக்காவது இருக்க வேண்டுமானால் அது அதிமுகவினருக்கு தான் இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் கனவுகளை சிதைப்பவர்கள் தான் வருத்தப்பட வேண்டும். அண்ணாமலை இளைஞர்களை ஈர்க்கிறார்.
அண்ணாமலைக்கு பாராட்டு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இளைஞர்களை ஈர்த்து வருகிறார். அவர் சம்பாதிக்க விரும்பினால் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சென்றிருக்கலாம். ஆனால் ஐபிஎஸ் பணியை உதறிவிட்டு வந்தவர். அவர் சிறந்த உழைப்பாளி. திமுகவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் மக்களே கடுமையான செய்தியை சொல்ல இருக்கின்றனர்.
‘விக்ஷித் பாரத்’ என்றால் நாட்டின் ஒவ்வொரு மூலை ,முடுக்கும் வளர்ச்சியைப் பெற வேண்டும் என்பதே பொருள். தமிழ்நாடு எங்களது விக்ஷித் பாரத் கனவை செலுத்தும் உந்து சக்தியாக தமிழகம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ் மொழியை அரசியல் சர்ச்சைகளுக்கு உட்படுத்துவது வேதனையளிக்கிறது. பாஜக மாநில மொழிகளை குறைத்து மதிப்பிடுவதாக எப்போதும் குற்றஞ்சாட்டப்படுகிறது. தமிழக உணவுப் பதார்த்தங்கள் உலகளவில் பிரபல்யமாகியுள்ளது. அதேபோல் தமிழ் மொழியும் பிரபலப்படுத்தப்பட வேண்டும். அதைவிடுத்து தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்வது தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்கே தீங்கு விளைவிக்கக் கூடியது.
அமலாக்கத்துறையோடு தொடர்பில்லை: அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. அதோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களிடம் சுமார் 7 ஆயிரம் வழக்குகள் உள்ளன. அதில் அரசியல்வாதிகள் மீதான வழக்கு 3 சதவீதத்துக்கும் குறைவு. எந்த கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும் நடைமுறை ஒன்றுதான். அமலாக்கத்துறை சோதனையால் போதைப் பொருள் விற்பவர்கள் சிறையில் உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT