இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகல்

சாவித்ரி ஜிண்டால்
சாவித்ரி ஜிண்டால்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹரியாணா முன்னாள் அமைச்சரும் பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “ஹிசார் தொகுதியின் எம்எல்ஏ-வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். ஹரியாணா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டாலின் மகனும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவர் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிண்டாலின் விலகலை அடுத்து 84 வயதாகும் அவரது தாய் சாவித்ரி ஜிண்டாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால். அதோடு, உலகின் 50-வது மிகப் பெரிய பணக்காரராகவும் அவர் இருக்கிறார். ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. ஜிண்டால் குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.45 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in