கவிதாவுக்கு ஏப்ரல் 9 வரை 14 நாள் நீதிமன்ற காவல்: டெல்லி திஹார் சிறையில் அடைப்பு

கவிதா
கவிதா
Updated on
1 min read

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறைகடந்த 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 நாட்களும் பிறகு மேலும் 3 நாட்களும் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் அமலாக்கத் துறை காவல் முடிவடைந்ததால் கவிதா நேற்று காலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் 15 நாட்கள் கவிதாவை தங்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரியது. அதேவேளையில், மகனுக்கு தேர்வு நேரம் என்பதால் உடனே ஜாமீன் வழங்க வேண்டும் என கவிதா தரப்பில் கேட்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கவிதாவை மேலும் 14 நாட்கள் (ஏப்ரல் 9 வரை) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்த மனு வரும் ஏப்ரல் 1-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in