

புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலை ‘மதுபான ஊழலின் மன்னன்’ என்று அமலாக்கத் துறை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சி, இந்த வழக்கில் தொடர்புடைய அரபிந்தோ பார்மா உரிமையாளர் தேர்தல் பத்திரங்கள் மூலம் அளித்த பணம் பாஜகவுக்கு சென்றது என்று பதிலடி கொடுத்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், அமலாக்கத் துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்த 2 வருடங்களாக எங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரே கேள்விதான் எழுகிறது. இத்தனை சோதனைகள் நடந்திருந்தும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்களிடமிருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் எங்கே? அந்தப் பணம் எங்கே போனது?
சரத் சந்திர ரெட்டி என்ற ஒரு நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சரத் சந்திர ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு நன்கொடை கொடுத்த அரபிந்தோ பார்மாவின் உரிமையாளர்.
கடந்த 2022ம் ஆண்டு நவ.9 ஆம் தேதி இவருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவர், தான் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்ததோ, அவரிடம் பேசியதோ இல்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
பல மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் தனது கூற்றை மாற்றிக் கொண்டார். அவர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தாகவும், மதுபான கொள்கை தொடர்பாக அவரிடம் பேசியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஊழல் செய்யப்பட்டதாக சொல்லப்படும் அந்தப் பணம் எங்கே போனது?” என்று அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவாதம் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது முதலே பாஜக, எஸ்பிஐ, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் விவரங்களை மறைக்கவே முயற்சி செய்து வந்தன. என்றாலும் அந்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர். டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் அவர் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். கேஜ்ரிவாலை 10 நாட்கள்காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரிய நிலையில், கேஜ்ரிவாலிடம் மார்ச் 28 ஆம் தேதி வரை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது.